காப்பர் விலை மேலும் சரியலாம் 'கோல்டுமேன் சாக்ஸ்' எச்சரிக்கை

ஈ ரான் மீதான போர் பதற்றம் மற்றும் உலக பொருளாதார நெருக்கடி காரணமாக, வரும் நாட்களில் காப்பர் விலை மேலும் சரிய வாய்ப்புள்ளதாக 'கோல்டுமேன் சாக்ஸ்' நிறுவனம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக, நடப்பு ஆண்டில் காப்பரின் சராசரி விலை ஒரு டன் 12,850 டாலராக இருக்கும் என்ற அதன் முந்தைய கணிப்பை, 12,650 டாலராக குறைத்துள்ளது.

ஈரான் உடனான ஒப்பந்தத்திற்கான டிரம்பின் காலக்கெடு முடிவடைய உள்ள நிலையில், அந்நாட்டின் உள்நாட்டு கட்டமைப்புகள்மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது. குறிப்பாக, ஹார்முஸ் ஜலசந்தி தொடர்ந்து முடக்கப்பட்டால், காப்பர் விலை கடும் வீழ்ச்சியை சந்திக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நிபுணர்கள் கூறுவதாவது:

“கச்சா எண்ணெய் விலை உயர்வால், கடந்த ஒரு மாத காலமாகவே தொழிற்சாலைகளில் உலோகங்களுக்கான தேவை வெகுவாக குறைந்துள்ளது. அமெரிக்காவிற்கு வெளியே நிலவும் தட்டுப்பாடு, மற்றும் உலக நாடுகள் இருப்பு வைக்கும் போக்கு ஆகியவை அதன் விலைக்கு சாதகமாக இருந்தாலும், உலக பொருளாதாரம் மிக மோசமான நிலைக்கு சென்றால், இந்த சாதகமான அம்சங்கள் பலனளிக்காது”.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement