பைரதி பசவராஜுக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட்டில் சி.ஐ.டி., மனு

பெங்களூரு: கொலை வழக்கில், பா.ஜ., - எம்.எல்.ஏ., பைரதி பசவராஜுக்கு, மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய ஜாமினை ரத்து செய்யக்கோரி, உயர் நீதிமன்றத்தில், சி.ஐ.டி., மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.

பெங்களூரு பாரதிநகரில் வசித்த ரவுடி சிவகுமார் என்கிற பிக்லு சிவா, 46, கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டார். நிலத்தகராறில் நடந்த இந்த கொலையில், கே.ஆர்.புரம் பா.ஜ., - எம்.எல்.ஏ., பைரதி பசவராஜ் ஐந்தாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.

இவ்வழக்கை முதலில் பாரதிநகர் போலீசார் விசாரித்தனர். பின், சி.ஐ.டி., விசாரணைக்கு அரசு மாற்றியது. பாரதிநகர் போலீஸ் நிலையத்தில் இரண்டு முறை, விசாரணைக்கு ஆஜரான போது எனக்கும், கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று, பைரதி பசவராஜ் கூறினார்.

சி.ஐ.டி., விசாரணை நடந்த போது, எம்.எல்.ஏ.,வை கைது செய்ய அதிகாரிகள் தீவிரம் காட்டினர். இதனால், அவர் தலைமறைவானார்.

அவரது முன்ஜாமின் மனு உயர், உச்ச நீதிமன்றங்களில் தள்ளுபடியானதால், பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். விசாரணைக்கு பின், சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த மாதம், 12 ம் தேதி அவருக்கு ஜாமின் வழங்கி, மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஜாமினில் வந்த அவர், சில நாட்கள் வெளியே தலைகாட்டாமல் இருந்தார். பின், சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்றார்.

இந்நிலையில், பைரதி பசவராஜுக்கு மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம் வழங்கிய, ஜாமினை ரத்து செய்யக்கோரி, உயர் நீதிமன்றத்தில், சி.ஐ.டி., நேற்று முன்தினம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து உள்ளார்.

அவருக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இருப்பதாகவும், அவர் வெளியில் இருந்தால் சாட்சிகளை அழிக்க வாய்ப்பு உள்ளது என்றும், மனுவில் குறிப்பிட்டு உள்ளனர். இம்மனு விரைவில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட உள்ளது.

Advertisement