ரூ.45 கோடியில் குடிநீர் திட்டத்தை முதல்வர் திறந்தும்.. பயனில்லை! 9 ஊராட்சிகளில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்
திருத்தணி: திருத்தணி, ஆர்.கே.பேட்டை ஒன்றியங்களில் ஒன்பது ஊராட்சிகளில், நிலவிவரும் குடிநீர் பிரச்னையை தீர்க்க, ஜல் - ஜீவன் திட்டத்தின் கீழ், 45 கோடி ரூபாயில் நிறைவடைந்த திட்டப்பணிகளை தமிழக முதல்வர் திறந்துவைத்தும், செயல்பாட்டிற்கு வரவில்லை. இதனால், மேல்நிலைத் தொட்டிகளுக்கு குடிநீர் ஏற்றி குடியிருப்புகளுக்கு வினியோகம் செய்யாததால், கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. மத்திய அரசின் 'ஜல்ஜீவன்' திட்டத்தின் கீழ், திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு தாலுகா, வெளியகரம் ஊராட்சிக்கு புதிய கூட்டு குடிநீர் திட்டம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், 2022ல் அறிவிக்கப்பட்டது.
மொத்தம் 45 கோடி ரூபாயில், கொசஸ்தலை ஆற்றில் ஆறு உறிஞ்சு கிணறுகள் மற்றும் குழாய்கள் அமைத்து, தினமும் எடுக்கப்படும் 27.60 லட்சம் லிட்டர் குடிநீரை ஒன்பது ஊராட்சிகளுக்கு வழங்க முடிவானது.
அதன்படி, திருத்தணி ஒன்றியத்தில் செருக்கனுார், தாடூர், எஸ்.அக்ரஹாரம், கார்த்திகேயபுரம், கன்னிகாபுரம்; ஆர்.கே.பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட வங்கனுார், ஆர்.கே.பேட்டை, ஜி.சி.எஸ்., கண்டிகை, எஸ்.வி.ஜி.புரம் ஆகிய ஊராட்சிகளில், தடையில்லாத குடிநீர் வழங்குவதற்காக இத்திட்டப்பணிகள், 2023ல் துவங்கின.
இந்த திட்டத்திற்காக, ஒன்பது ஊராட்சிகளிலும், கீழ்நிலை, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கான கட்டுமானங்கள் மற்றும் குழாய்கள் பதிக்கும் பணிகளை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மேற்கொண்டது.
அலட்சியம் திட்டப்பணிகள் கடந்த, ஜனவரி மாதம் நிறைவடைந்ததை அடுத்து, முதல்வர் ஸ்டாலின், மேற்கண்ட குடிநீர் திட்டப்பணிகளை பிப்., 5ல் திறந்து வைத்து, பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
திறப்பு விழா முடிந்து, இரு மாதங்களான நிலையில், ஊராட்சிகளில் உள்ள மேல்நிலைத் தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்றப்படாமல் இருக்கிறது. இதனால், கோடை காலத்தில் ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
பகுதிமக்கள் கூறியதாவது:
கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் முழுமை பெறாமல், பெயரளவில் திறப்புவிழா காணப்பட்டுள்ளது. குடிநீர் தொட்டி கட்டடங்களுக்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை. தவிர, மின் மோட்டாரும் அமைக்கவில்லை.
இதனால், குழாய் பதிப்பு உள்ளிட்ட பணிகள் முடிந்தும், முதல்வர் திறந்துவைத்தும் இதுவரை செயல்பாட்டிற்கு கொண்டு வராமல், வாரிய அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
திட்டம் செயல்பாடிற்கு வராவிட்டால், 45 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம் வீணாகும். எனவே கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்து, ஒன்பது ஊராட்சிகளில் குடிநீர் பிரச்னையை தீர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
சோதனை ஓட்டம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
திருத்தணி மற்றும் ஆர்.கே.பேட்டை ஒன்றியங்களில், ஒன்பது ஊராட்சிகளில் ஒவ்வொரு மேல்நிலைத் தொட்டிக்கும் மின் மோட்டார் விரைவாக அமைக்கப்படும்.
பின், தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்றி, அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்பட உள்ளது. வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கி, மாதம் 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருவள்ளூர் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி கூறியதாவது:
பள்ளிப்பட்டு கொசஸ்தலை ஆற்றில் இருந்து எடுத்து வரப்படும் குடிநீர், திருத்தணி ஒன்றியத்தில், 23 மற்றும் ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் 12 என, 35 மேல்நிலைத் தொட்டிகளில் ஏற்றப்படும். அங்கிருந்து கிராமங்களுக்கு செல்லும் குழாய்கள் வாயிலாக, குடிநீர் வினியோகம் செய்யப்படும்.
மூன்று மாதங்கள் சோதனை ஓட்டம் முடிந்து, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் எங்களிடம் ஒப்படைக்கும். அதன் பின் பராமரிப்பு மற்றும் குடிநீர் வழங்கும் முறையில், மாற்றம் செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
போர் நிறுத்த முடிவுக்கு சம்மதம் ஆனால் லெபனானை தாக்குவோம் :இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
-
இஸ்ரேல் பிரதமருக்கு உள்நாட்டில் எதிர்ப்பு
-
மீனாட்சி அம்மன் கோயில் தேர்களுக்கு 7 டன் எடையில் புதிய இரும்பு சக்கரங்கள்: வீரவசந்தராயர் மண்டபம் சீரமைப்பு பணி தீவிரம்
-
ஈரோடில் பணிமனை திறப்பு ;காங்., நிர்வாகிகள் 'ஆப்சென்ட்'
-
மங்களூரு - எழும்பூர் சிறப்பு ரயில் அறிவிப்பு
-
த.வெ.க., பிரசாரத்தில் 'அலப்பறை' ;நோயாளிகள், முதியோர் அவதி