தேர்தலுக்காக பத்திரப்பதிவை தள்ளிப்போடும் மக்கள்

2

சென்னை: தேர்தல் நடைமுறைகள் காரணமாக, வீடு, மனை வாங்குவோர், அதற்கான பத்திரப் பதிவை ஒத்திவைப்பதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில், 589 சார் - பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இதில், தினசரி குறைந்தபட்சமாக தலா, 100 முதல், 200 பத்திரங்கள் பதிவாகும். முகூர்த்த நாட்களில் இதில், 50 சதவீதத்துக்கு கூடுதலாக பத்திரங்கள் பதிவாகும்.

சொத்து விற்பனையில், ரொக்க பரிமாற்றத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பத்திரத்தில் குறிப்பிடப்படும் தொகை, வழிகாட்டி மதிப்பில் தான் இருக்கும். ஆனால், பெரும்பாலான இடங்களில் சந்தை மதிப்பு அடிப்படையில் விலை பேசப்பட்டு, அதற்கான தொகை ரகசியமாக கைமாறுவது வழக்கம்.

தற்போது, தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக, உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் ரொக்க பணம் பறக்கும் படையால் பறிமுதல் செய்யப்படுகிறது. இதனால், சொத்து விற்பவர்கள், வாங்குபவர்கள் ரொக்க பணத்தை எடுத்துச் செல்ல தயங்குகின்றனர்.

அதன் காரணமாக, பத்திரப்பதிவை தேர்தலுக்கு பின் மேற்கொள்ளலாம் என, பலரும் ஒத்தி வைத்துள்ளனர் .

இது குறித்து, பதிவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பத்திர பதிவுக்கும், ரொக்க பரிமாற்றத்துக்கும் நேரடி தொடர்பில்லை. இருப்பினும், தேர்தல் அறிவிப்பு வந்த பின்னர், பத்திர பதிவுக்கு வருவோர் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

பெரும்பாலான அலுவலகங்களில், ஓரிரு டோக்கன்கள் மட்டுமே எடுக்கப்படுகின்றன. பொதுவாக நிதி ஆண்டின் முதல் மாதத்தில், பத்திரப்பதிவில் சற்று தொய்வு காணப்படும். தமிழ் புத்தாண்டு பிறப்புக்கு பின், பத்திரப்பதிவு செய்யலாம் என்று, மக்கள் திட்டமிடுவர். ஆனால், தேர்தல் நடைமுறைகளால், இது தற்போது அதிகரித்துள்ளதாக தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement