கர்நாடகாவில் காகிதமில்லா சட்டசபை புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
பெங்களூரு: காகிதமில்லா சட்டசபையை நடத்துவது தொடர்பாக, கர்நாடக - மத்திய அரசு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
கர்நாடகாவில் ஆண்டிற்கு நான்கு முறை சட்டசபை கூட்டத்தொடர் நடக்கிறது. முதல் மூன்று கூட்டத்தொடர்கள், பெங்களூரு விதான் சவுதாவிலும், டிசம்பர் மாதம் நடக்கும் குளிர்கால கூட்டத்தொடர் பெலகாவி சுவர்ண விதான் சவுதாவிலும் நடக்கிறது.
தமிழகத்தை போன்று கர்நாடகாவிலும் காகிதமில்லா சட்டசபை கூட்டத்தொடர் நடத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதுகுறித்து பரிசீலிப்பதாக சபாநாயகர் காதர் கூறி இருந்தார்.
இந்நிலையில் காகிதமில்லா சட்டசபை நடத்துவது தொடர்பாக கர்நாடக - மத்திய அரசு இடையில் நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து ஆனது. சபாநாயகர் காதர், மத்திய பார்லிமென்ட் விவகார துறை அமைச்சக கூடுதல் செயலர் சத்யபிரகாஷ் கதனா ஆகியோர் கையெழுத்திட்டனர்.
விதான் சவுதா, சுவர்ண விதான் சவுதாவில் காகிதமில்லா சட்டசபை நடத்த 70 கோடி ரூபாய் ஆகும் என்று செலவிடப்பட்டு உள்ளது.
மத்திய அரசின் நேவா எனும் தேசிய மின் விதான் செயலி திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்பட உள்ள காகிதமில்லா சட்டசபைக்கு மத்திய அரசு 60 சதவீதம், மாநில அரசு 40 சதவீதம் செலவு ஏற்கும்.
திட்டம் செயல்படுத்தப்படும் போது சட்டசபையில் உள்ள 224 எம்.எல்.ஏ.,க்களும், மேல்சபையில் உள்ள 75 எம்.எல்.சி.,க்களும், அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு தொடுதிரை மூலம் பதில் கிடைக்கும்.