'டெட்' தேர்வுக்கு பணிச்சான்று பெறுவதில் இழுபறி; விண்ணப்பிக்கும் அவகாசம் நீட்டிக்கப்படுமா
மதுரை: தேர்வு, தேர்தல் பணிகளால் சிறப்பு 'டெட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க பணிச்சான்று பெறுவதில் இழுபறி நீடிப்பதால், இம்மாதம் இறுதி வரை விண்ணப்பிக்க அவகாசம் அளிக்க வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தால் அரசு, உதவிபெறும் பள்ளிகளில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு 'டெட்' தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டது. தமிழகத்தில் 2011ல் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 'டெட்' குறித்த உச்ச நீதிமன்ற வழக்கு ஒன்றில், 'அனைத்து மாநிலங் களிலும், 5 ஆண்டுகளில் ஓய்வு பெற உள்ளோர் தவிர பணியில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் இரண்டு ஆண்டுகளில் 'டெட்' தேர்ச்சி பெற வேண்டும்' என 1.9.2025ல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பணியில் உள்ள ஆசிரியர்கள் தேர்ச்சி பெற தமிழகத்தில் சிறப்பு 'டெட்' தேர்வு அறிவிக்கப்பட்டு, ஏப்.,10க்குள் விண்ணப்பிக்க உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர் விண்ணப்பிக்க சம்பந்தப்பட்ட கல்வி அலுவலர்களிடம் பணிச்சான்று பெற்று பதிவேற்றம் செய்ய வேண்டும். பொதுத் தேர்வு, ஆண்டுத் தேர்வு, தேர்தல் பணிகள் காரணமாக கல்வி அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு பல்வேறு பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
பொதுத் தேர்வு முடிந்து விடைத்தாள் திருத்தும் முகாம்கள் நடப்பதால் பணிச்சான்று வழங்க வேண்டிய அலுவலர்கள் பெரும்பாலும் முகாம் பணிக்கு சென்று விடுகின்றனர். இதனால் தற்போது வரை 60 சதவீதம் ஆசிரியரே விண்ணப்பித்துள்ளனர். அனைத்து சான்றிதழ்களுக்கும் உண்மைத் தன்மை சான்று பெற வேண்டியது பெரும் சவாலாக இருப்பதால் 40 சதவீதம் ஆசிரியர்கள் விண்ணப்பிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: ஆசிரியர்கள் 20 ஆண்டுகளுக்கு மேல் பணியில் உள்ளனர். சிறப்பு 'டெட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க அனைத்து கல்விச் சான்றுக்கும் உண்மைத் தன்மை கோரப்படுகிறது. இச்சான்றை சம்பந்தப்பட்ட பல்கலைகள், தேர்வுத் துறை அலுவலகங்களில் விண்ணப்பித்து எளிதில் பெறமுடிவதில்லை.
பல ஆண்டுகள் அனுபவம் உள்ளதால் தலைமையாசிரியரே பணிச் சான்று வழங்கலாம் என குறிப்பிட்டிருந்தால் எளிதாக இருந்திருக்கும். ஆனால் தேவையின்றி அனைத்து கல்வி சான்றிதழ்களுக்கும், உண்மை தன்மை சான்றுகள் பெற்று பதிவேற்றம் செய்ய வேண்டியுள்ளது.
இதற்கிடையே தேர்வும், தேர்தலும் வந்ததால் அலுவலர் அப்பணிக்கு சென்று விடுகின்றனர். பணிச்சான்றுக்கு விண்ணப்பித்து பல நாட்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. எனவே இத்தேர்வுக்கு ஏப்., இறுதி வரை விண்ணப்பிக்க அவகாசம் அளிக்க வேண்டும். அப்போது தான் அனைவரும் விண்ணப்பிக்க முடியும் என்றனர்.
மேலும்
-
அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி; பிரேமலதா நம்பிக்கை
-
கஸ்டம்ஸ் சாலை விரிவுபடுத்தப்படும் ;அ.தி.மு.க.வேட்பாளர் உறுதி
-
அமைச்சர் கணேசன் ஓட்டு சேகரிப்பு
-
தே.மு.தி.க., பொதுச் செயலாளர் பிரேமலதாவிடம் தரும் கேள்விகள்
-
பைக் மீது அரசு பஸ் மோதி விபத்து ;கல்லுாரி மாணவர் கால் அகற்றம்
-
சுருக்கு வலையை பயன்படுத்தி மீன் பிடிப்பு: 10 படகுகள் பறிமுதல்