சுருக்கு வலையை பயன்படுத்தி மீன் பிடிப்பு: 10 படகுகள் பறிமுதல்
புதுச்சத்திரம்: அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தி, மீன் பிடித்த 10 படகுகள், 2 சுருக்குமடி வலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
புதுச்சத்திரம் அடுத்த சாமியார்பேட்டை கடற்கரை பகுதியில், நேற்று காலை 10 படகுகளில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி, மீன் பிடித்தனர்.
தகவலறிந்த புதுச்சத்திரம் போலீசார், சாமியார்பேட்டைக்கு விரைந்து மீனவர்களிடம் விசாரணை நடத்தினர். மயிலாடுதுறை மாவட்டம் மடவாமேடு பகுதியை சேர்ந்த மதி, 45; கவுரி, 40; கடலுார் மாவட்டம் எம்.ஜி.ஆர். திட்டு பகுதியை சேர்ந்த ரமேஷ், 40; சேகர், 58; உள்ளிட்ட 40 பேர், அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடிவலையை பயன்படுத்தி, மீன் பிடித்தது தெரிந்தது.
இதுகுறித்து கடலுார் மீன்வளத்துறைக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். மீன்வளத்துறை துணை இயக்குனர் ரம்யாலட்சுமி, சாமியார்பேட்டை பகுதிக்கு சென்று, மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, சுருக்குமடி வலையை பயன்படுத்தி பிடித்த மீன்களை, கடலில் விட்டனர்.
மேலும் மீன் பிடிக்க பயன்படுத்திய 10 படகுகள், இரண்டு சுருக்குமடி வலைகளையும் பறிமுதல் செய்து, மீன்வளத்துறை அலுவலகத்திற்கு எடுத்துச் செல்ல உத்தரவிட்டார்.