பைக் மீது அரசு பஸ் மோதி விபத்து ;கல்லுாரி மாணவர் கால் அகற்றம்

புவனகிரி: பைக்கில் சென்ற தனியார் கல்லுாாி மாணவர் அரசு பஸ் மோதி காயம் அடைந்த விவகாரம் குறித்து, போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

கடலுார் மாவட்டம், புவனகிரி அருகே கீரப்பாளையம் ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் அழகானந்தம் மகன் சேக்கு ராஜா,17; கீரப்பாளையத்தில் உள்ள தனியார் தொழில்நுட்பக்கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று முன் தினம் மாலை நண்பரான புவனகிரி தாலுகா, பூவாலை கிராமத்தைச் சேர்ந்த மோகன் மகன் கோகுல்தாஸ்,19;என்பவருடன் பைக்கில் பி.முட்லுாரில் இருந்து புவனகிரி நோக்கி சென்றார்.

பைக்கை கோகுல்தாஸ் ஓட்டிய நிலையில் பின்பக்கம் சேக்குராஜா அமர்ந்திருந்தார். புவனகிரி அருகே தம்பிக்குநல்லான்பட்டினம் அருகில் சென்றபோது, சிதம்பரத்தில் இருந்து கடலுார் நோக்கி சென்ற

அரசு பஸ் நேருக்கு நேர் மோதியதில் இருவரும் காயம் அடைந்தனர்.

அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு சிதம்பரத்தில் உள்ள மாவட்ட அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சைக்குப் பின் தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சேக்குராஜாவின் வலது காலில் நரம்பு துண்டானதால்,முட்டிக்கும் கீழ் அகற்றப்பட்டது.

கோகுல்தாஸ் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார். இது குறித்து சேக்குராஜா தந்தை அழகானந்தம் புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement