ஈரானில் உள்ள இந்தியர்கள் வெளியே வராதீர்கள்: மத்திய அரசு எச்சரிக்கை

புதுடில்லி: ஈரானை முற்றிலுமாக அழிப்போம் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ள நிலையில், 'ஈரானில் உள்ள இந்தியர்கள் யாரும் வெளியே செல்ல வேண்டாம்' என, மத்திய அரசு எச்சரித்துள்ளது.

மேற்காசிய நாடான ஈரான் மீதான அமெரிக்காவின் போர் ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வருகிறது. போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்த முன்மொழிவை அமெரிக்கா வழங்கிய போதும், அதை ஈரான் நிராகரித்தது.

மேலும், கச்சா எண்ணெய் கப்பல்கள் செல்லும் கடல் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கி வைத்துள்ளது. 'அங்கு சுதந்திரமாக கப்பல்கள் செல்லும் நிலையை ஏற்படுத்த வேண்டும்' என, அதிபர் டிரம்ப் சமீபத்தில் ஆபாசமாக திட்டி ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். எதையும் ஈரான் கண்டுகொள்ளாததால், தற்போது ஈரானை அழித்துவிடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் கடும் பதற்றம் நிலவுகிறது.

இந்நிலையில் ஈரானில் சிக்கி உள்ள நூற்றுக்கணக்கான இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.

அதில், 'அடுத்த 48 மணி நேரத்துக்கு வெளியே செல்ல வேண்டும். அவரவர் இருக்கும் இடத்திலேயே இருக்க வேண்டும். ராணுவ தளங்கள், மின்சார அமைப்புகள் மற்றும் உயரமான கட்டடங்களை தவிர்க்கவும். கட்டாயம் வெளியில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால் இந்திய தூதரகத்துக்கு தகவல் தெரிவியுங்கள். அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை தொடர்ந்து கவனியுங்கள்' என, குறிப்பிட்டுள்ளது.

Advertisement