8 மோதிரம், பிரேஸ்லெட், செயின் பட்டு வேட்டியுடன் வந்த சுயேச்சை

1

கோவை, சிங்காநல்லுார் தொகுதியில் ஏற்கனவே ஆறு பேர் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தனர். நேற்று முன்தினமும் சுயேச்சை வேட்பாளர்களின் ஆதிக்கம் இருந்தது. இதில், உக்கடம் பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் தாஹிர் உசேன், 29, பலரின் கவனத்தை ஈர்த்தார்.

மண்டல அலுவலகத்திற்கு, தன் ஆதரவாளர்களுடன் வந்த இவர், பட்டு வேட்டி, சட்டை, துண்டுடன், எட்டு விரல்களில் பெரிய மோதிரங்கள், பிரேஸ்லெட், கழுத்தில் பெரிய செயின் அணிந்த நிலையில், புது மாப்பிள்ளை கோலத்தில் வந்தார்.

இவரின் வேட்புமனு தாக்கலில், அரை கிலோ தங்கம், ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் நிலங்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

வேட்புமனு தாக்கலுக்கு பின், தாஹிர் உசேன் கூறுகையில், “சமூக வலைதளங்களில், என்னை 50,000 பேர் பின்பற்றுகின்றனர். சிங்காநல்லுார் என் தொகுதி. இங்கு, சாலை, சாக்கடை வசதி, குடிநீர் வசதிகள் அனைத்து பகுதிகளிலும் முழுமையாக இல்லை.

“இதை மக்களிடம் எடுத்துரைப்பேன். 5,000 முதல் 10,000 ஓட்டுகள் கிடைத்தாலே பெரிய விஷயம். சுயேச்சையாக போட்டியிடுபவரின் பலத்தை காட்ட வேண்டும் என்பதற்காகவே, எட்டு மோதிரங்கள், ஒரு பிரேஸ்லெட், ஒரு செயின் என, 22 சவரன் தங்க நகைகள் அணிந்து வந்தேன்,” என்றார்.

Advertisement