தமிழக அரசின் தலைமை செயலர் மாற்றம் ; தேர்தல் ஆணையம் உத்தரவு

33

சென்னை: தமிழக அரசின் தலைமை செயலாளர் முருகானந்தத்தை மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்து வருகின்றன. இதையொட்டி, தேர்தலை நியாயமாக நடத்தும் பொருட்டு, பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது. அந்த வகையில், 3 ஆண்டுகளுக்கு ஒரே பதவியில் இருப்பவர்கள் மற்றும் புகாருக்குள்ளான, ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்தது.

இந்த நிலையில், தமிழக அரசின் தலைமை செயலாளர் முருகானந்தம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சாய்குமார் புதிய தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல, லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி டேவிட் தேவாசிர்வாதம் மாற்றப்பட்டுள்ளார். ஆயுதப்படை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக சந்தீப் மிட்டல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே, தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில், தமிழக டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டிருந்தார்.

Advertisement