ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க ரூ.18.5 கோடி வரை கட்டணம்

1

டெஹ்ரான்: ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்களிடம், 18.5 கோடி ரூபாய் வரை கட்டணம் வசூலிக்க, ஈரான் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

போர் நிறுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ள நிலையில், உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க ஈரான் முன்வந்துள்ளது.

இதற்கிடையே, ஈரான் பார்லிமென்ட் ஒரு முக்கிய மசோதாவுக்கு நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, கப்பல்களின் வகை, எடை மற்றும் பிற நிலைமைகளைப் பொறுத்து கட்டணம் நிர்ணயிக்கப் படலாம் என்றும் கூறப்படுகிறது.

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் ஒவ்வொரு கப்பலிடமும் 18.5 கோடி ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

இந்தக் கட்டணத்தை ஓமனுடன் பகிர்ந்துகொள்வதாக ஈரான் தெரிவித்துள்ளது. இப்படி வசூலிக்கப்படும் பணம், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்களால் சேதமடைந்த ஈரானின் உள்கட்டமைப்புகளை மீட்டெடுப்பதற்கு பயன்படுத்தப்பட உள்ளதாக ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தினசரி 100க்கும் மேற்பட்ட கப்பல்கள் செல்லும் நிலையில், இந்த புதிய கட்டணம் அமலுக்கு வந்தால் கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் உள்ளது.

இந்தியா உட்பட பல நாடுகள் இந்த ஜலசந்தியை நம்பியுள்ளன. எனவே, இந்த புதிய கட்டண விதி உலக வர்த்தகம், எரிசக்தி பாதுகாப்பு மற்றும் பணவீக்கத்தை பாதிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

@block_B@ ஓமன் மறுப்பு! ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்களுக்கு கட்டணம் வசூலிக்கும் ஈரானின் திட்டத்தை, ஓமன் போக்குவரத்து அமைச்சர் பின் ஹமூத் பின் சயீத் அல் மாவாலி திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். “ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்களுக்கு எந்தவித கட்டணமும் விதிக்கக் கூடாது என்று கூறும் அனைத்து கடல் போக்குவரத்து ஒப்பந்தங்களிலும் ஓமன் கையெழுத்திட்டுள்ளது. எனவே, கட்டணம் வசூலிக்க முடியாது,” என, அவர் தெளிவுபடுத்தினார். சர்வதேச சட்டப்படி ஹார்முஸ் ஜலசந்தி, சுதந்திரமான கடல் பாதையாகக் கருதப்படுகிறது. எனவே, எந்த நாடும் தனியாக கட்டணம் வசூலிக்க முடியாது என்று நிபுணர்களும் தெரிவித்துள்ளனர்.block_B

Advertisement