நெல் கொள்முதல் நிலையம் கூடலுாரில் புதிதாக திறப்பு

மதுராந்தகம்: அச்சிறுபாக்கம் அருகே உள்ள கூடலுார் கிராமத்தில், புதிதாக நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.

அச்சிறுபாக்கம் ஒன்றியம், கூடலுார் கிராமத்தில், 2,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில், விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது.

இப்பகுதியில் உள்ள விவசாயிகள், 2,000 ஏக்கர் பரப்பளவில், சம்பா பருவ நெல் சாகுபடி செய்துள்ளனர். தற்போது, இதற்கான அறுவடை பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

அவ்வாறு அறுவடை செய்யப்படும் நெல்லை, சில ஆண்டுகளாக கழனிப்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வந்த நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து வந்தனர்.

இதனால், விவசாயிகளுக்கு நேரம் மற்றும் பண விரயம் ஏற்பட்டு வந்தது. இதை தவிர்க்க, கூடலுார் கிராமத்திற்கு புதிதாக நெல் கொள்முதல் நிலையம் வரும் என்ற நம்பிக்கையில், கூடலுார் நெற்களம் பகுதியில் நெல்லை கொட்டி வைத்து, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பாதுகாத்து வந்தனர்.

இந்நிலையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலமாக, கூடலுார் கிராமத்தில் நெல் கொள்முதல் செய்ய, நேற்று பூஜை நடந்தது. இதில், கூடலுார் ஊராட்சி தலைவர் அன்பழகன், ஒன்றிய கவுன்சிலர் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.

Advertisement