வைகை ஆற்றில் சாக்கு மூடைகளில் வேகம் எடுக்கும் மணல் கொள்ளை பள்ளமாகும் ஆற்றில் மக்களுக்கு ஆபத்து

பரமக்குடி: பரமக்குடி வைகை ஆற்றில் மக்கள் கூடும் இடங்களில் மணல் கொள்ளை வேகம் எடுக்கும் நிலையில் திருவிழா நாட்களில் ஆபத்தான நிலை உள்ளது.

பரமக்குடி வைகையில் குறிப்பிட்ட பகுதிகளில் ஆற்று மணல் பாதுகாக்கப்பட்டு வருகிறது. முன்பு அனைத்து பகுதிகளும் மணல் குவாரிகள் அமைக்கப்பட்டதுடன், ஏராளமான லாரிகளில் மணல் கொள்ளை சென்றுள்ளது. குறிப்பிட்ட ஆண்டுகளில் மணல் பாதுகாக்கப்பட்டாலும் சாக்கு மூடைகள் மற்றும் தண்ணீர் குடங்களில் கடத்தல் என்பது தீர்வு காண முடியாத ஒன்றாக உள்ளது.

தற்போது சித்திரைத் திருவிழா நடக்கும் பகுதியில் ஆற்றங்கரையோரம் சாக்கு மூடைகளில் மணல் கொள்ளை நிரந்தரமாகியுள்ளது. இதனால் ஆங்காங்கே பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு ஆபத்தை விளைவிப்பதாக உள்ளது. மேலும் தண்ணீர் வரும் காலங்களில் பள்ளங்களில் கழிவுநீர் தேங்கி விபத்திற்கு வழி வகுக்கும்.

இருக்கும் மணலை காப்பாற்றினால் மட்டுமே பரமக்குடி போன்ற பகுதிகளில் நீராதாரத்தை பெற முடியும். மேலும் தேர்தல் காலமாக உள்ளதால் சமூக விரோதிகளை கண்காணிக்க போலீசார் ரோந்து பணிகளை வைகை ஆறு உள்ளிட்ட கரையோரங்களில் அதிகப்படுத்த வேண்டும்.

இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் நடக்கும் மணல் கொள்ளையை தடுக்க அனைத்து துறை அதிகாரிகள் முனைப்புடன் செயல்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

Advertisement