பேரூராட்சி மக்களுக்கு நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் 150 நாள் வேலை அ.தி.மு.க., வேட்பாளர் ராஜசேகர் உறுதி

செய்யூர்: அ.தி.மு.க., ஆட்சி அமைந்த உடன் பேரூராட்சி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் நிச்சயம் வேலை வழங்கப்படும் என, செய்யூர் சட்டசபை தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் ராஜசேகர் உறுதி அளித்துள்ளார்.

செய்யூர் சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க., சார்பாக போட்டியிடும் ராஜசேகர் நேற்று இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட ஓதியூர், முதலியார்குப்பம், பனையூர், விளம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார். அனைத்து பகுதிகளிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஓட்டு சேகரிப்பின் போது கடலோர மீனவர்களின் குறைகளை கேட்டறிந்து, அ.தி.மு.க., ஆட்சி அமைந்த உடன் அத்தியாவசியமான கோரிக்கைகளான கடல் அரிப்பை தடுக்க துாண்டில் முள்வளைவுகள், மீன்வலை பாதுகாப்புக்கூடம் அமைப்பது போன்றவை விரைந்து நிறைவேற்றப்படும் என்றார்.

பேரூராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் துாய்மையான குடிநீர் இல்லாமல் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அ.தி.மு.க., ஆட்சி அமைந்த உடன் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் பரிசோதனை செய்யப்பட்டு குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும்.

மேலும் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நகர்புற வேலைவாய்ப்புத் திட்டத்தில் 150 நாட்கள் நிச்சயம் வேலை வழங்கப்படும் என, வேட்பாளர் ராஜசேகர் உறுதி அளித்தார்.

ஓட்டு சேகரிப்பின் போது செங்கல்பட்டு கிழக்கு அ.தி.மு.க., மாவட்ட செயலர் திருக்கழுக்குன்றம் ஆறுமுகம், பா.ம.க., தெற்கு மாவட்ட செயலர் கணபதி, இடைக்கழிநாடு அ.தி.மு.க., பேரூர் செயலர் ஆறுமுகம் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர்.

Advertisement