மரத்தைச் சுற்றி கான்கிரீட் தளம் :சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிருப்தி

தேனாம்பேட்டை: நடைபாதைகளில் உள்ள மரங்களைச் சுற்றிலும், இடைவெளி விடாமல் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டுள்ளதற்கு, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

தேனாம்பேட்டை, சிவசங்கரன் சாலையில் மாநகராட்சி சார்பில் புதிதாக நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இப்பணியை ஒப்பந்தம் எடுத்த மாநகராட்சி ஒப்பந்ததாரர், நடைபாதையில் உள்ள மரத்தை ஒட்டியபடி கான்கிரீட் தளம் அமைத்துள்ளனர்.

இதனால், தண்ணீர் செல்ல வழியின்றி மரம் பட்டுபோகும் அபாயம் உள்ளது. இது, சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியதாவது:

நடைபாதைகளை அமைக்கும்போது, மரங்களைச் சுற்றி 3 அடி இடைவெளி விட்டு, நடைபாதை அமைத்திருக்க வேண்டும். அப்போது தான், வேர் பகுதிக்கு தண்ணீர் செல்லும். மரங்களின் வளர்ச்சி நன்றாக இருக்கும்.

ஆனால் சிவசங்கரன் சாலையில், மரங்களைச் சுற்றிலும் கான்கிரீட் தளம் போடப்பட்டுள்ளதால், மரங்கள் பட்டுபோவது மட்டுமல்லாமல், லேசான காற்று அடித்தாலே சாய்ந்து விடும் அபாயம் உள்ளது. இதுபோல், பல நடைபாதைகளில், மரங்களைச் சுற்றிலும் இடைவெளி விடாமல் கான்கிரீட் தளம் போடப்பட்டுள்ளது.

எனவே, மரத்தைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள கான்கிரீட் தளத்தை அகற்ற, மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement