தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு ‛ஜெ'., மட்டும் இன்று இருந்திருந்தால் .... ஒக்கூரில் செந்தில்நாதன் எம்.எல்.ஏ., பேச்சு   

சிவகங்கை:தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு இருக்கும் நிலை கண்டு பெண்கள் அனைவரும், ‛‛ஜெ., மட்டும் இன்றைக்கு இருந்திருந்தால்'' என கேட்டு வருகின்றனர் என ஒக்கூரில் பிரசாரத்தின் போது சிவகங்கை அ.தி.மு.க., வேட்பாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ., பேசினார்.

சிவகங்கை வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் அ.தி.மு.க., தேர்தல் பிரசாரம் நடந்தது. ஒன்றிய செயலாளர் கருணாகரன் தலைமை வகித்தார். அ.ம.மு.க., மாணவரணி செயலாளர் தனம்அபிநயா, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கோமதி தேவராஜ், த.மா.கா., முன்னாள் எம்.பி., உடையப்பன், ராமலிங்கம், பா.ஜ., கந்தசாமி, சுப்புக்காளை உட்பட கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர். செந்தில்நாதன் எம்.எல்.ஏ., பேசியதாவது: நடக்கும் சட்டசபை தேர்தல் மீண்டும் ஜெ., ஆட்சியும், அவரது நலத்திட்டமும் தொடர வேண்டுமா அல்லது நாட்டையே கொள்ளையடித்த ஸ்டாலின் குடும்பம் தொடர வேண்டுமா என்பதற்கான தேர்தல். ஜெ.,வின் தாலிக்கு தங்கம், மினி கிளினிக் திட்டத்தை தி.மு.க., ரத்து செய்தது.

பொய் வாக்குறுதிகளால் மக்களை ஏமாற்றக்கூடிய ஆட்சியாக தி.மு.க., உள்ளது. இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளதை பார்க்கையில் ‛ஜெ., மட்டும் இன்று இருந்திருந்தால்' என தமிழக பெண்கள் கேட்டு வருகின்றனர்.

அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் விவசாயத்திற்கு முன்பணமாக எக்டேருக்கு ரூ.15,000 தரப்படும். அ.தி.மு.க., ஆட்சி அமைந்தால் குடும்பத்திற்கு ரூ.10,000 வழங்கப்படும். கூட்டுறவு, கல்வி கடன் ரத்து செய்யப்படும் என பொது செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார். சட்டம் ஒழுங்கு சீர்கேடின்றி மக்கள் நிம்மதியாகவும், பெண்கள் பாதுகாப்பாக வாழ மீண்டும் அ.தி.மு.க., தான் ஆட்சிக்கு வர வேண்டும் என பேசினார். மதகுபட்டியில் வயலில் இறங்கி நெல் நாற்று நடவு செய்து பெண்களிடம் ஓட்டு சேகரித்தார். ///

Advertisement