மாணவியர் கையில் மது; மாணவர் கையில் அரிவாள்: தமிழகத்தை தி.மு.க., சீரழித்ததாக பழனிசாமி புகார்

5

சென்னை: “அ.தி.மு.க.,வில் இருந்து துாக்கி எறியப்பட்டவர்களில் 19 பேர், தி.மு.க., வேட்பாளர்களாக உள்ளனர்,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்தார்.

சென்னையில் அ.தி.மு.க., கூட்டணி சார்பில் போட்டியிடும் வேளச்சேரி - அசோக், சைதாப்பேட்டை - செந்தமிழன், விருகம்பாக்கம் - ரவி ஆகியோரை ஆதரித்து, நேற்று பழனிசாமி பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது: தி.மு.க., தற்போது 'கார்ப்பரேட் கம்பெனி'யாகி விட்டது. கம்பெனியை போல, குடும்ப உறுப்பினர்கள் தான் கட்சியை நடத்துகின்றனர்.

சென்னையில், அ.தி.மு.க., ஆட்சியின்போது, 'வர்தா' புயலில், இரண்டு லட்சம் டன் குப்பையை வெளியேற்றினோம். புயலில் சரிந்து விழுந்த மின் கம்பங்களை, போர்க்கால அடிப்படையில் சரி செய்தோம். விழுந்த மரங்களை உடனடியாக அப்புறப்படுத்தி, தடையில்லா போக்குவரத்தை ஏற்படுத்தினோம்.

தி.மு.க., ஆட்சியில், சிறு மழைக்கே, சென்னையில் எங்கு பார்த்தாலும் நீர் தேங்கிக் கிடக்கிறது. அதனால் தான் ஒரு பெண்மணி, 'ஸ்டாலின் தான் வந்தாரு... நீச்சலடிக்க விட்டாரு' என பேசினார். அது, சமூகவலைதளங்களில் பிரபலமானது.

ஆனால், 'யார் அந்த சார்' அமைச்சருடன், நடைபயணம் சென்ற முதல்வர் ஸ்டாலின், 'உதயநிதி நடித்த கலகத்தலைவன் படம் நன்றாக வசூலாகிறதா' என கேட்கிறார். எப்போதும் குடும்பத்தை பற்றி சிந்திக்கும் முதல்வர் தேவையா?

தி.மு.க.,வுக்காக உழைத்தவர்கள் வீதியில் நிற்கின்றனர். ஆனால், மகன் உதயநிதிக்கு பதவி கிடைக்கிறது. இப்போது இன்பநிதி வந்து விட்டார்.

தி.மு.க.,வில் அமைச்சராக இருப்போரில் எட்டு பேர் அ.தி.மு.க.,வினர். நாங்கள் செல்லாத ஓட்டு என துாக்கி எறிந்தவர்களை, அங்கே துாக்கி வைத்துள்ளனர். இப்போது, தி.மு.க., வேட்பாளர்களில், 19 பேர் அ.தி.மு.க.,வினர்.

தி.மு.க., ஆட்சியில் பெண் பிள்ளைகள் மது அருந்துகின்றனர். நெல்லை வகுப்பறையில் மாணவியர் மது அருந்துவதைப் பார்த்தோம்; மாணவர் அரிவாள் எடுத்து வருகிறார்.

இந்த ஆட்சியில், தமிழகத்தையும் மாணவர்களையும் சீரழித்து விட்டனர். இந்த நிலை மாற, அ.தி.மு.க., ஆட்சி மலர வேண்டும். அ.தி.மு.க., ஆட்சி அமைந்த மூன்றே மாதத்தில், கஞ்சா ஒழிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.


@block_Y@

டில்லியை விட்டு வராத ஸ்டாலின்



' தொகுதி மறுவரையறையால், தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை' என, ஏற்கனவே மத்திய அரசு தெளிவுப்படுத்தி விட்டது. ஆனாலும், அதை வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கிறார் ஸ்டாலின். அ.தி.மு.க., கூட்டணி குறித்து பேச, அவருக்கு சப்ஜெக்ட் எதுவும் இல்லை. அதனால் லோக்சபா தொகுதி வரையறை குறித்து பேசுகிறார்.

என்னைப் பெற்றி பேச வேண்டும் என்ற முடிவோடு, அவதூறு பேசுகிறார் ஸ்டாலின். நான் மட்டுமல்ல; அ.தி.மு.க., தொண்டர்கள் யாரும் யாருக்கும் அடிமை இல்லை. யாருக்கும் அஞ்ச மாட்டோம். தமிழக நன்மைக்காக யாரையும் ஆதிரிப்போம். தமிழகத்திற்கு எதிரானது என்றால், அதை எதிர்ப்போம்.

தமிழக அணியா, டில்லி அணியா என, ஸ்டாலின் புதிதாக கண்டுபிடித்து இருக்கிறார். இதற்காக அவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்து விடலாம். தமிழகத்தில் தேர்தல் நடக்கிறது. ஆனால், ஸ்டாலின் டில்லியிலே உட்கார்ந்து இருக்கிறார். டில்லி என்றால் ஸ்டாலினுக்கு பயம். அதனால் டில்லியை விட்டு தமிழகத்திற்கு வரமாட்டேன் என்கிறார்.

- பழனிசாமி, பொதுச்செயலர், அ.தி.மு.க.,
block_Y

Advertisement