அஷ்டநாகர்கள் வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்

உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவிலில், அரச மரத்தின் கீழ் எழுந்தருளி வரும் அஷ்ட நாகர்களை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள் குறித்து, கோவில் தலவரலாறில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ குளிகன்: பித்ருக்களுக்கு உபகாரம் செய்பவராகவும், பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப பலன் தருபவராகவும் கருதப்படும் ஸ்ரீ குளிகனை பாலாபிஷேகம் செய்வித்து, வணங்கி வலம் வந்தால், அகால மரணம், விபத்து முதலிய துன்பத்திலிருந்து தடுத்து, நம்மை காத்திடுவார் என்பது தெய்வ கூற்றாகும்.

ஸ்ரீ பத்மன்: தாமரை தடாகம், மலர் தடாகம், வாச மலர், நந்தவனம். செண்பகம் முதலிய நறுமலர் தோட்டங்களில் காவல் தெய்வமாக இருப்பவர். பூஜைக்காகவும், தெய்வ காரியங்களுக்காகவும் மலர் பறிக்கும் பொழுது இவர் கண்ணுக்கு தெரிய மாட்டார். இவர் பெயரில் பத்மசேரி என்ற ஊர் உள்ளது. இவரை பாலாபிஷேகம் செய்வித்து வணங்கி வலம் வந்தால், நந்தவனம்,மலர் தோட்டங்களில் தீங்கின்றி நம்மை பாதுகாப்பார் என்பது பலனாகும்.

ஸ்ரீ கார்கோடன் : சிவபெருமான் அணியும் நாகர் இவரே. இவர் பெயரில் கார்கோட நல்லூர் உள்ளது. இவரை பாலாபிஷேகம் செய்து வணங்கி வலம் வந்தால் சிவனருள் கிடைக்கும் என்பது சிவனடியார்கள் கூற்றாகும். இவர்கள் எட்டு பேரும் அமிர்தம் உண்டதால் சிரஞ்சீவிகள் ஆவர்.

நாக சதுர்த்தி, நாகபஞ்சமி: ஒவ்வொரு மாதமும் ஆயில்யம் நட்சத்திரத்தன்று, ஸ்ரீ அனந்தன் முதலான எட்டு நாகராஜாக்களுக்கு சிறப்பு வழிபாடுகள், நாகசதுர்த்தி, நாக பஞ்சமி முதலிய விசேஷ நாட்களில், அஷ்ட நாகருக்கு பாலாபிஷேகம், தேனாபிஷேகம் முதலிய பலவிதமான அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெறுகிறது.

சங்க பாலர், ஸ்ரீ பத்மபாலன்: சங்கநிதி, பத்மநிதி, விநாயகர் கோவிலில், காவல் பொறுப்பாக இருப்பவர்கள். விநாயகர் யந்திரத்தில் ஈசானியத்தில் பத்மபாலரும், அக்கினி மூலையில் சங்க பாலரும் அமர்ந்திருப்பர்.

வியாபாரிகள் போன்று நாள்தோறும் விநாயகப் பெருமான் முன், வரவு செலவு கணக்காக ஒப்பிப்பார்கள். எனவே தொழில் வளர்ச்சி வேண்டுவோர், ஸ்ரீ சங்கபாலர்,ஸ்ரீ பத்மபாலருக்கு இத்தலத்தில் வந்து பாலாபிஷேகம் செய்து வணங்கி வலம் வந்தால் வியாபாரப் போட்டிகள் குறைந்து தொழில் வளம் மேலோங்கும் என்பது ஐதீகம்.

Advertisement