கடன் நிறுவனங்கள் பதிவு செய்வது கட்டாயம்: ஊட்டி: நீலகிரி கலெக்டர் லட்சுமி பவ்யா அறிக்கை:
தமிழகத்தில் இயங்கி வரும் அனைத்து பணம் கடன் வழங்கும் நிறுவனங்களும் பதிவு செய்து கொள்வதை அரசு கட்டாயமாக்கியுள்ளது. இச்சட்டத்தின் முக்கிய நோக்கம் நுண் நிதியியல் நிறுவனங்கள் , கடன் வழங்கும் முகமைகள் மற்றும் கடன் வழங்கும் அமைப்புகள் போன்ற பணக்கடன் வழங்கும் நிறுவனங்களின் செயல்பாடுகளை ஒழுங்கு படுத்துவதாகும்.
மேலும், கடன்களை கட்டாயமாக வசூலிப்பதற்காக கையாளும் வற்புறுத்தல் சார்ந்த வழிமுறைகளால் ஏற்படும் இன்னல்களிலிருந்து பொதுமக்களை, குறிப்பாக விவசாயிகள், பெண்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்கள் உள்ளிட்ட பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் மற்றும் தனி நபர்களை பாதுகாத்தலும் பணக்கடன் வழங்குதல் மற்றும் அது சார்ந்த விவகாரங்களை நிர்வகிப்பதாகும்.
இதில், பதிவு சான்றிதழ் பெறாமல், மாவட்டத்திற்குள் எவ்விதமான பணம் கடன் வழங்கும் வணிக செயல்பாடுகளையும் மேற்கொள்ள கூடாது. இச்சட்ட விதிகள் தொடர்பாக ஏதேனும் முறைகேடுகள் கண்டறியப்பட்டால், மாவட்ட நிர்வாகம் அல்லது காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்களை தெரிவிக்கலாம் இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.