ஒரு செய்திக்கு ரூ.50,000!
- நமது நிருபர் -
மேற்கு வங்கத்தில் ஆட்சி செய்யும் திரிணமுல் காங்கிரஸ், தமிழக தேர்தலில் பரபரப்பை ஏற்படுத்தும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. முதலில், அந்த கட்சி தலைவரும், அம்மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி, 'தி.மு.க., - காங்., - பா.ஜ., ரகசிய கூட்டணி வைத்திருக்கின்றனர். அதனால் தான், மேற்கு வங்கத்தின் 600 தேர்தல் அதிகாரிகளை தமிழக தேர்தல் பணிக்கு அனுப்பிவிட்டனர்' என்று, வழக்கம்போல் நம்ப முடியாத ஒரு விஷயத்தை சொன்னது, தி.மு.க.,விற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது பற்றி தமிழக திரிணமுல் பொதுச்செயலர் ஹக்கீமிடம் கேட்டபோது, “தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவளித்து நான் எழுதிய கடிதத்தை, அ.தி.மு.க.,வுக்கு ஆதரவளிப்பது போல மாற்றி வெளியிட்டுள்ளனர். இதற்கு விளக்கம் சொல்லியே அலுத்து விட்டது. இதை எப்படி சரிசெய்வது என புரியாமல் தவித்து வருகிறேன்,” என்றார். ஹக்கீமை பாதித்தது போல், களத்தில் உள்ள வேட்பாளர்கள் பெரும்பாலானோரை பாதித்து வருகின்றன சமூக ஊடக போலி செய்திகள்.
மாதிரி 1:
கடந்த 2021 சட்டசபை தேர்தலில், சென்னை ராயபுரம் தொகுதியில், முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தோல்வி அடைந்தார். 'பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்ததால், சிறுபான்மையினர் ஓட்டுகள் கிடைக்காமல் தோல்வி அடைந்தேன்' என, அப்போது அவர் கூறியிருந்தார். இந்த தேர்தலில், பா.ஜ., கூட்டணியில், அதே ராயபுரம் தொகுதியில், அவர் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், 'முஸ்லிம் ஓட்டுகள் இல்லாமலேயே ராயபுரத்தில் வெற்றி பெறுவேன்' என ஜெயகுமார் பேசியது போன்ற ஒரு போலி செய்தி, சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. அதிர்ச்சி அடைந்த ஜெயகுமார், அவசரமாக மறுப்பு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவரிடம் கேட்டபோது, “என்னுடன் நேரடியாக மோத முடியாத கோழைகள், இத்தனை ஆண்டுகளாக ரத்தமும் சதையுமாய் பழகிக் கொண்டிருக்கும் என் முஸ்லிம் உறவுகளுடனான பிணைப்பை முறிக்க ஆசைப்பட்டு, குழந்தைத்தனமாக இதுபோன்று பதிவிடுவது சிரிப்பைத் தான் வரவழைக்கிறது,” என்றார்.
மாதிரி 2:
மதுரை மத்திய தொகுதியில், புதிய நீதிக்கட்சி சார்பில், இரட்டை இலை சின்னத்தில் திரைப்பட இயக்குநர் சுந்தர்.சி போட்டியிடுகிறார். இந்த தொகுதிக்குள், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்ளது. 'தேர்தலில் வெற்றி பெற்றால், மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றிலும் இறைச்சி விற்பனையை தடை செய்து, கோவில் நகரத்தின் புனிதத்தை பாதுகாப்பேன்' என்று சுந்தர் பேசியதாக, சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின.
முஸ்லிம் ஓட்டுகள் அடிபடும் என்ற பயத்தில், 'தேர்தலில் நான் வெற்றி பெற்றால், அனைவருக்கும் அசைவ விருந்து வைப்பேன். நானே, வாரத்தில் ஆறு நாள் அசைவம் சாப்பிடுகிறேன். நேரடியாக எதிர்கொள்ள தைரியம் இன்றி, குறுக்கு வழியை நாடுவோரின் இதுபோன்ற கீழ்தரமான நடவடிக்கைகளுக்கு, நம் ஒற்றுமை மற்றும் வெற்றியால் பதிலடி தருவோம்' என்று பிரசாரம் செய்ய தொடங்கி விட்டார்.
மாதிரி 3:
திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்றும் விஷயத்தில் தி.மு.க., சிக்கி உள்ள நிலையில், திருப்பரங்குன்றம் தொகுதியில், தி.மு.க., சார்பில் கிருத்திகா தங்கபாண்டி போட்டியிடுகிறார். 'நான் வென்றால், திருப்பரங்குன்றம் தர்கா மாண்பை பேணி காக்கும் வகையில், தீபம் ஏற்றுவதை தடை செய்ய சட்ட மசோதா கொண்டு வரப்படும்' என அவர் பேசியதாக, சமூக ஊடகங்களில் செய்தி பரவியது.
ஹிந்துக்களுக்கு எதிரான கட்சி என்று, தி.மு.க., மீது விமர்சனம் உள்ள நிலையில், இந்த செய்தியால் அதிர்ச்சி அடைந்த கிருத்திகா, தான் அவ்வாறு பேசவில்லை என்றும், மத மோதலை துாண்ட நடக்கும் சதி என்றும் விளக்கம் அளித்தார்.
மாதிரி 4:
இந்த சட்டசபை தேர்தலில், 27 தொகுதிகளில் பா.ஜ., போட்டியிட்டாலும், அக்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை போட்டியிடவில்லை. அதற்கான காரணங்களை விளக்கி, பா.ஜ., தேசியத் தலைவர் நிதின் நபினுக்கு அவர் எழுதியதாக ஒரு கடிதம் வெளியானது. 'எளிதில் வெற்றி பெறக்கூடிய தொகுதிகளை வாங்காமல், தி.மு.க.,வின் கோட்டையான தொகுதிகளை வாங்கியுள்ளனர்' என அதில் கூறப்பட்டிருந்தது.
இது, பா.ஜ.,வினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது போலி கடிதம் என அண்ணாமலை மறுத்துள்ளார். ஆனாலும், இந்த கடிதம், அண்ணாமலைக்கே சாதகமாக இருப்பதால், எப்படி வெளியானது என்பது குறித்த ஆராய்ச்சி, அரசியல் களத்தில் இன்னும் உள்ளது.
செய்முறை
சமூக ஊடகங்களில் இவ்வாறு செய்திகளை பரப்புவது, ஒவ்வொரு கட்சியின் ஐ.டி., விங் மற்றும் 'வார் ரூம்' தான். பொய் செய்திகளை பரப்புவதற்கு இரண்டு உத்திகள் வைத்திருக்கின்றனர். பெரிய விஷயங்களை பரப்புவதற்கு சாதாரண ஊடகங்களை நாடி, 'நீங்கள் சிறிய அளவிலாவது வெளியிடுங்கள். நாங்கள் மற்றதை பார்த்துக் கொள்கிறோம்' என்று சொல்கின்றனர்.
அவர்கள் மடங்கவில்லை என்றால், பெயர் பெற்ற யு டியூப் சேனல்களை அணுகி, அதை வெளியிட சொல்கின்றனர். அதன்பின், அதை அந்த கட்சி தலைவர் எடுத்து பேசுகிறார். இதற்கு ஓர் உதாரணம், சமீபத்தில் வெளியான தி.மு.க., பொதுச் செயலர் ஆ.ராஜா பேச்சு.
மற்ற விஷயங்களை பரப்புவதற்கு, சமூக ஊடகங்களில் நிறைய போலி கணக்குகள் வைத்திருக்கின்றனர். அதில் ஒன்றில் பதிவிட்டுவிட்டு, அந்த பதிவிற்கான 'லிங்க்'கை 'வாட்ஸாப்' குழுக்கள் அல்லது சேனல்கள் வாயிலாக பரப்புகின்றனர். வாட்ஸாப் குழு அல்லது சேனல் நடத்துவோருக்கு குழுவின் தரத்தை பொறுத்தும், ஆட்கள் எண்ணிக்கையை பொறுத்தும் பணம் வழங்கப்படுகிறது.
இன்றைய நிலையில், சாதாரண வாட்ஸாப் குழுக்களுக்கு, பொய் செய்தி ஒன்றுக்கு 50,000 ரூபாய் வரை வழங்கப்படுகிறது. ஐ.ஏ.எஸ்., - - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் உள்ள குழுக்கள், அரசு உயர் அதிகாரிகள் உள்ள குழுக்கள் மற்றும் 'எலைட்' குழுக்களில் பொய் செய்தி வெளியிடுவதற்கு 1 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.
வழக்கமான தேர்தல் செலவுகளே கண்ணைக் கட்டிவரும் நிலையில், இதற்கும் செலவு செய்ய வேண்டுமா என, வேட்பாளர்கள் வியப்பில் உள்ளனர்.
அதிகமான பொய்யான செய்திகளை சமூக ஊடகங்கள் மூலம் பரப்புவதில் தமிழகத்தில் பாஜக தான் முண்ணனியில் உள்ளது என்பது எல்லோருக்கும் தெரியும்!
திராவிட மாடல் அல்வா இப்படித்தான் வேலை செய்யும்.
இதற்கு தான் அந்த 14 நாட்களுக்கும் எல்லா செய்தி ஊடகங்களையும் தேர்தல் ஆணையம் தனது கையில் எடுத்துக் கொண்டு தணிக்கை செய்யப்பட்ட பிரசாரத்தை மட்டும் ஒலிபரப்பலாம். சமூக ஊடகங்களுக்கு 14 நாட்களுக்கு தடை விதித்து விடலாம் என்று நான் நேற்று பதிவிட்டேன்.
அய்யா பொது ஜனமே! தலை சுத்துது. டிரம்ப் சார், தமிழக திராவிட ஐடி விங்க் ஆஃபீஸ் மேல பத்து குண்டுகளை சத்தமே இல்லாமல் போடுங்க.மேலும்
-
மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய ராமதாஸ் மனு தள்ளுபடி
-
காரைக்குடியில் சைக்கிளில் வந்த விஜய்: பேசாமல் சென்றதால் தொண்டர்கள் ஏமாற்றம்
-
மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம்: பாஜ தாராள வாக்குறுதி
-
படித்தவர், படிக்காதவர் என அனைவருக்கும் அரசு வேலை; பிரசாரத்தில் அள்ளிவிட்ட சீமான்
-
ராஜ்யசபா எம்.பி.,யாக நிதிஷ் குமார் பதவியேற்பு
-
பண மூட்டை விவகாரம்; நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா