'தே.மு.தி.க., சேர்ந்ததால் தி.மு.க.,விற்கு பலமில்லை'

5

அ.தி.மு.க., தலைமை நிலைய செயலரும், முன்னாள் அமைச்சரும், கோவை தொண்டாமுத்துார் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான வேலுமணி, நம் நாளிதழுக்கு அளித்த பேட்டி:

தேர்தல் களத்தில் அ.தி.மு.க., வேலை செய்யாமல் துாங்கிக் கொண்டிருக்கிறது; தி.மு.க., தான் முனைப்போடு வேலை செய்கிறது என்ற தோற்றம், அனைத்து மட்டத்திலும் தென்படுகிறதே...




அது செட்டப். ஒரு மாயையை உருவாக்குகின்றனர். தேர்தல் களத்தில் நாங்கள் இருக்கிறோம். அ.தி.மு.க., ஆட்சி வர வேண்டுமென மக்கள் முடிவெடுத்து விட்டனர். தி.மு.க.,வினர் அவர்களுக்கு தகுந்த மாதிரி, அவர்களுக்கான ஊடகங்களை வைத்து, பரப்பிக்கொண்டு இருக்கின்றனர். கூட்டணியை நாங்களே வேகமாக முடித்தோம். வேட்பாளர்கள் அறிவித்தோம்.

கூட்டணியை இறுதி செய்வதில் தி.மு.க., தான் தாமதம் செய்தது. நேற்று கூட ஒரு வேட்பாளரை காங்கிரஸ் அறிவித்தது. அவர்கள் தான் களத்தில் இருப்பதை போல், சிலரை வைத்து பேச வைக்கின்றனர், பரப்புகின்றனர். தி.மு.க., மீது மக்கள் கடுமையான அதிருப்தியில் இருக்கின்றனர்; அது களத்தில் தெரிகிறது.

அதிருப்தியை அ.தி.மு.க.,வுக்கு சாதகமாக கொண்டு வர என்ன முயற்சி செய்தீர்கள்? அப்படியொரு முயற்சி எடுத்த மாதிரி தெரியவில்லையே...




அப்படி இல்லை. தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் செய்துள்ளோம். கடைசியாக, தே.ஜ., கூட்டணி சார்பில் தமிழகம் முழுதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அது மிகப்பெரிய எழுச்சியாக இருந்தது.

கோவையில், நானும் அண்ணாமலையும் பங்கேற்றோம். சட்டசபையில் மக்களுக்காக குரல் கொடுத்தோம். கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தோம். தி.மு.க.,வை கடுமையாக எதிர்ப்பதோடு மட்டுமின்றி, மக்களுக்கு ஆதரவாகவும் அ.தி.மு.க., நிற்கிறது.

த.வெ.க.,வை அ.தி.மு.க.,வுடன் கூட்டணி சேர்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. பழனிசாமியின் பொதுக்கூட்டங்களில் கூட த.வெ.க., கட்சி கொடி காட்டி, துண்டு சுற்ற ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த கூட்டணி கைநழுவி போனது ஏன்? த.வெ.க., தலைவர் விஜய், ஏதேனும் 'டீல்' பேசினாரா? என்ன எதிர்பார்த்தனர், எதனால் விலகிச் சென்றனர்?




த.வெ.க.,வுடன் கூட்டணி சேர்க்க பேசினேன், சந்தித்தேன் என யார் கூறினர் என தெரியவில்லை. அதுபோன்ற சம்பவமே நடக்கவில்லை. கூட்டணி பேச்சே நடக்கவில்லை. கரூர் சம்பவத்துக்கு பின், பயந்து போய், அவர்களது தொண்டர்களே பழனிசாமி கூட்டத்துக்கு வந்து கொடி காட்டினர். எங்களுக்கு த.வெ.க.,வை சேர்க்க வேண்டுமென்பதில்லை.

அ.தி.மு.க., பலம் வாய்ந்த கட்சி. 30 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துள்ளோம்; பல்வேறு திட்டங்கள் தந்துள்ளோம். த.வெ.க., புது கட்சி. அவர்களை பொறுத்தவரை திடீரென வருகின்றனர்; காணாமல் போகின்றனர். 10 நாட்களாக காணோம். அவர்கள் எங்கள் கணக்கிலேயே இல்லை. சேர்க்க வேண்டிய அவசியமே இல்லை.

மஹா சிவராத்திரி அன்று, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதாவும், நீங்களும் ஈஷா மையத்தில் அருகருகே இருந்தீர்கள். மறுநாள், தி.மு.க., கூட்டணிக்கு பிரேமலதா சென்று விட்டார். அன்றிரவு நடந்தது என்ன?




அது, பொதுவான நிகழ்ச்சி. பிரேமலதா வருவதே எனக்குத் தெரியாது. மத்திய அமைச்சர்கள் வந்திருந்தனர். என் தொகுதிக்குள் இருப்பதால், ஒவ்வொரு ஆண்டும் செல்வேன். கூட்டணியில் இருந்தனர். நட்பு ரீதியாக பேசிக் கொண்டிருந்தோம்.

லோக்சபா தேர்தலில் கூட்டணியில் இருந்தனர். அவர்களிடம் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. அதனால், தி.மு.க.,வுடன் சேர்ந்திருக்கலாம். அவர்கள் அங்கு சேர்ந்ததால் தி.மு.க.,வுக்கு பலமில்லை; எங்களுக்கு பலவீனமும் இல்லை. எங்களது கூட்டணி பலமாக இருக்கிறது. அன்றைய சந்திப்பு எதேச்சையாக நடந்தது.

புதிய தமிழகம் கிருஷ்ணசாமியை, அ.தி.மு.க., கூட்டணியில் சேர்க்க முயன்றீர்கள். அவர், தனித்து போட்டியிடுவதால், அ.தி.மு.க.,வுக்கு தென் மாவட்டங்களில் பாதிப்பு ஏற்படாதா?




அப்படியில்லை. அவர், கூட்டணியில் தொடர வேண்டுமென விரும்பினேன். பொதுச்செயலர் பழனிசாமியும் விரும்பினார். அவர்களுடைய எதிர்பார்ப்பு கூடுதலாக இருந்தது. அதே நேரம், அ.தி.மு.க.,வுக்காக பணியாற்றிய நிர்வாகிகளுக்கு 'சீட்' கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவர்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியவில்லை.

தென்மாவட்டங்களில் அ.தி.மு.க., நிர்வாகிகள் வலுவாக இருக்கின்றனர். வெற்றி உறுதி. எந்த கட்சியையும் நாங்களே அனுப்பவில்லை; சூழல் உருவாகி விட்டது. இன்னும் பேசி இறங்கி வந்திருந்தால் முடிந்திருக்கும். கூட்டணி சேராததால் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை.

கொங்கு மண்டலம் அ.தி.மு.க., கோ ட்டை. கடந்த முறை 10க்கு 10 வென்றீர்கள். இந்த முறை தி.மு.க., தளபதியாக செந்தில் பாலாஜி களம் இறக்கப்பட்டுள்ளார். கடும் 'டப்' கொடுப்பதாக தெரிகிறது. எவ்வளவு வெல்வீர்கள்?




விளம்பர அரசியல் செய்கின்றனர். 2021ல் இப்படித்தான் செய்தனர். கோவை மட்டுமின்றி, அவிநாசியையும் சேர்த்து 11 தொகுதியிலும் எங்களுக்கு வெற்றி உறுதி. 50 ஆண்டு கால வளர்ச்சியை தந்திருக்கிறோம். ஐந்து ஆண்டுகளாக அவர்கள் எதுவும் செய்யவில்லை.

கோவையில் இத்தனை பாலங்கள் வர யார் காரணம்? அவிநாசி ரோடு பாலத்துக்கு நாங்களே நிதி ஒதுக்கி, வேலை செய்தோம். கொரோனா சமயத்தில் ஓராண்டு பணி முடங்கியது; இல்லையெனில், நாங்களே கட்டி முடித்து திறந்திருப்போம்.

ஸ்மார்ட் சிட்டி திட்டங்களை சரியாக பராமரிப்பதில்லை. அரசு மருத்துவமனையை மேம்படுத்தினோம். கேன்சர் சிகிச்சைக்கு, 25 கோடி ரூபாயில் கருவி கொண்டு வந்தோம். அவிநாசி - அத்திக்கடவு திட்டத்திற்கு 70 ஆண்டுகளாக போராடிக் கொண்டிருந்தோம்.

முதல்வராக ஜெ., இருந்தபோது அரசாணை வெளியிட்டார். முழுமையாக நிதி ஒதுக்கி செயல்படுத்தினோம்; வேறு யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. இதுபோல் நிறைய திட்டங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

கோவையில் இரண்டு தொகுதியை பா.ஜ., எதிர்பார்த்தது. ஒன்று வானதிக்கு, இன்னொன்று அண்ணாமலைக்கு. ஒன்று மட்டும் கொடுத்ததால் அண்ணாமலை போட்டியிட முடியவில்லை என்கின்றனரே...




அண்ணாமலையே பதில் சொல்லி விட்டார். அவர், மக்கள் மதிப்பை பெற்ற நல்ல தலைவர். அவர் எது கேட்டாலும் பா.ஜ., கொடுக்கும். எங்களுக்கு அதில் 'ரோல்' இல்லை. எந்த கட்சியுடனும், கூட்டணி பேசும்போது தலைவர்களை சொல்லி, 'சீட்' கேட்க மாட்டார்கள். மொத்தமாக எத்தனை சீட் என கேட்டனர். யார் யாருக்கு சீட் என்பதை பா.ஜ., முடிவு செய்தது.

அண்ணாமலை, கோவை மட்டுமின்றி எங்கு வேண்டுமானாலும் நிற்கக்கூடிய சூழல் இருக்கிறது. பிரசாரத்துக்கு அவரை பயன்படுத்தலாம் என, பா.ஜ., நினைத்திருக்கலாம். அவரை நாங்கள் புறக்கணிக்க மாட்டோம்; பா.ஜ.,வும் புறக்கணிக்காது. அண்ணாமலைக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுப்பர் என நான் நினைக்கிறேன்.

கோவை தெற்கில் செந்தில் பாலாஜி போட்டியிடுவதை அறிந்தே, அத்தொகுதியை அ.தி.மு.க., எடுத்துக் கொண்டதா? தெற்கு தொகுதிக்கு பதிலாக வடக்கை பா.ஜ.,வுக்கு கொடுத்ததற்கு உண்மையான காரணம் என்ன?




பலம் வாய்ந்த வேட்பாளர் தெற்கில் நிற்க வேண்டும். இரண்டு முறை வென்ற அம்மன் அர்ஜுனனின் சொந்த தொகுதி. மாநகர் மாவட்ட செயலராக இருக்கிறார். மக்களிடம் நன்மதிப்பு பெற்றவர். நான் கொண்டு வந்த திட்டங்களை மக்களிடம் சேர்க்க உறுதுணையாக இருந்தவர். எளிமையானவர்.

சென்னையில், மழைநீர் வடிகால் சீரமைப்பை தீவிரமாக மேற்கொண்ட தி .மு.க., அரசு, கடைசி வரை அதை முறையாக செய்யவில்லை. அதில் பெரும் ஊழல் நடந்ததாக கூறப்படும் நிலையில், ஏற்கனவே உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த நீங்கள், அதை பிரதானப்படுத்தி மக்கள் மத்தியில் கொண்டு செல்லாதது ஏன்?




அப்படியில்லை. சட்டசபையில் அதிகமாக பேசியுள்ளோம். சென்னையில் எப்போது மழை பெய்தாலும், 3,000 இடங்களில் மழை தேங்கும். உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த சமயத்தில், அந்த எண்ணிக்கையை 180 - 200 இடமாக குறைத்தோம்.

தி.மு.க., சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை. எங்களது வழிகாட்டுதலை பின்பற்றி இருந்தால், சென்னையில் தண்ணீரே தேங்காது. தி.மு.க., செய்த தவறுகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்கிறோம். ஊடகங்கள் எடுத்துச் செல்ல வேண்டும்.

'தினமலர்' நாளிதழை தவிர, மற்ற ஊடகங்கள் தி.மு.க., கட்டுப்பாட்டில் இருக்கின்றன. அனைத்து இடங்களிலும் நாங்கள் பேசி வருகிறோம். ஆனால், மீடியாக்கள் மக்களிடம் கொண்டு செல்வதில்லை.

தி.மு.க.,வுடன் நீங்கள் இணக்கமாக இருந்ததால், உங்கள் மீது எந்த வழக்கும் போடாமல், தேர்தல் நெருக்கத்தில், சால்ஜாப்புக்காக, அமலாக்கத்துறை உங்கள் மீது வழக்கு பதிய வேண்டும் என, நீதிமன்றத்திற்கு தி.மு.க., சென்றுள்ளதா?




என் மீது எத்தனை வழக்கு போட்டுள்ளனர் தெரியுமா? அ.தி.மு.க.,வில் ஜெயலலிதாவை விட, என் மீதே அதிகமான வழக்கு போட்டுள்ளனர். நீதிமன்றங்கள் வாயிலாக அவற்றை எதிர்கொள்கிறேன். வழக்கு போட்டதே தவறு என போராடிக் கொண்டிருக்கிறேன். உச்ச நீதிமன்றம் வரை சென்று ஜெயித்திருக்கிறேன். அதிகமான வழக்கு, அதிகமான ரெய்டு என் வீட்டில் நடந்திருக்கிறது. என் அம்மா உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். முதுகில் அறுவை சிகிச்சை நடந்து, கட்டிலில் ஓய்வு எடுத்தார்.

அந்த கட்டிலை நகர்த்திப் பார்த்து சோதனை செய்தனர். என் குடும்பத்தினர், என்னை சார்ந்தவர்கள், என்னுடன் பழகியவர்கள் என 200 இடங்களில் சோதனை செய்தனர். மிக தவறான நடவடிக்கை. முதல்வராக பழனிசாமி இருந்தபோது, நானும் தங்கமணியும் ஆதரித்தோம். அதனால், தி.மு.க., பழிவாங்கும் போக்கில் நடந்து கொண்டது. அதிகமாக நான் தான் பாதிக்கப்பட்டு இருக்கிறேன்.

கட்சியை ஒருங்கிணைக்க முயற்சித்த செங்கோட்டையனை கட்சியை விட்டு நீக்கியதால் பலவீனமில்லையா?




கட்சி பிரிந்து போனது என்று சொல்வதே தவறு. அ.தி.மு.க., வலுவாக இருக்கிறது. தமிழகத்தில் மிகப்பெரிய கட்சி. செங்கோட்டையன் மீது பழனிசாமி மிகப்பெரிய மரியாதை வைத்திருந்தார்.

அவருக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை, போய்விட்டார். அவரைத்தான் கேட்க வேண்டும். அவர் சென்றதால் பலவீனமில்லை. பொன்விழா கண்ட கட்சி. இங்கு தனிநபர்களுக்கு முக்கியத்துவம் இல்லை; கட்சியே பிரதானம்.

கோவை மெட்ரோ திட்டத்திற்கு, மத்திய பா.ஜ., அரசு அனுமதி வழங்கவில்லை என, தி.மு.க., பிரசாரம் செய்கிறது. இது தொடர்பாக மத்திய அரசை நீங்கள் வலியுறுத்தினீர்களா?




கோவை மெட்ரோ திட்டத்தை மத்திய அரசு புறக்கணிக்கவில்லை. தி.மு.க., அரசு சரியாக திட்ட அறிக்கை சமர்ப்பிக்கவில்லை. கோப்பு அனுப்பும்போது, சில சந்தேகங்களை நிவர்த்தி செய்ய கோருவது இயல்பு. 2011 மக்கள் தொகையை குறிப்பிட்டால், எப்படி சரியாக இருக்கும். இப்போது, 2026.

தற்போதைய மக்கள் தொகையை குறிப்பிட்டால் சரியாக இருக்கும். மெட்ரோ திட்டத்தை எப்படி கொண்டு வர வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். இத்திட்டத்துக்கான சாத்தியக்கூறுகளை ஆராய, 3 கோடி ரூபாய் ஒதுக்கியது அ.தி.மு.க., அரசு. மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும் பிரதமரை சந்தித்து, கோவை மட்டுமின்றி மதுரைக்கும் மெட்ரோ திட்டம் கொண்டு வருவோம்.

தமிழகத்தில் தே.ஜ., கூட்டணி ஆட்சி அமையும் என்று பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோர் திரும்பத் திரும்ப கூறி வருகின்றனரே...




தமிழகத்தில் அ.தி.மு.க., தலைமையில் கூட்டணி. அ.தி.மு.க., ஆட்சி அமைக்கும்; பா.ஜ., உறுதுணையாக இருக்கும். முதல்வராக பழனிசாமி அமர்வார்.

முன்னாள் சபாநாயகர் தனபால் தொடர்ந்து வென்ற அவிநாசி தொகுதியை, பா.ஜ.,வுக்கு கொடுத்து விட்டீர்கள். உடல்நிலை சரியில்லாத தன்னை, அ.தி.மு.க.,வினர் யாரும் வந்து பார்க்கவில்லை என, அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறாரே...




தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். அவர் மீது மரியாதை வைத்திருக்கிறோம். இரண்டு முறை தனபால் ஜெயித்திருக்கிறார். அவருடைய மகனுக்கு சீட் கேட்டார். இந்த முறை உள்ளூர்காரர்கள் வாய்ப்பு கேட்டதால், அவருடைய சொந்த ஊர் பக்கம் வாய்ப்பு கொடுக்க பேசிக் கொண்டிருந்தோம். அவசரப்பட்டு போய்விட்டார். அவரை எப்போதும் ஒதுக்க மாட்டோம்.

@block_B@block_B

Advertisement