இஸ்திரி போட்ட அ.தி.மு.க., வேட்பாளர்; திருவொற்றியூரில் கவனம் ஈர்த்த ஓட்டு சேகரிப்பு

திருவொற்றியூர்: திருவொற்றியூரில் அ.தி.மு.க., வேட்பாளர் இஸ்திரி போட்டு கொடுத்து, ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டது கவனத்தை ஈர்த்தது.

திருவொற்றியூர் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ., கே.குப்பன் களம் இறக்கப்பட்டுள்ளார்.

இவர், நேற்று காலை, ஐந்தாவது வார்டுக்கு உட்பட்ட மாணிக்கம் நகர், ஜீவன்லால் நகர், விம்கோ நகர், சின்ன எர்ணாவூர், ராஜிவ்காந்தி நகர், பூம்புகார் நகர், அம்பேத்கர் நகர், ஸ்ரீரங்கம் நியூ டவுன், சக்தி புரம் உள்ளிட்ட பகுதிகளில் வீதிவீதியாக சென்று ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது, பெரியார் நகர் - விவேகானந்தா நகரில், கடை ஒன்றில் துணிகளுக்கு இஸ்திரி போட்டு கொடுத்து, ஓட்டு சேகரித்து கவனத்தை ஈர்த்தது.

தொடர்ந்து, எர்ணாவூர் சுனாமி குடியிருப்பு பகுதியில் ஓட்டு சேகரிக்க சென்ற குப்பனுக்கு, பகுதிமக்கள் மலர் துாவி சந்தன மாலை அணிவித்து, உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மேலும், வேட்பாளரை வரவேற்கும் விதமாக, சாலையில் இரட்டை இலை சின்னம் கோலம் வரைந்திருந்தனர். பின், நேதாஜி நகர், பாரதியார் நகர், ராமகிருஷ்ணா நகர், பாரத் நகர் உள்ளிட்ட பகுதிகளிலும், சுட்டெரிக்கும் வெயிலிலும், பிரசாரம் செய்தார்.

'மக்களின் வரவேற்பை பார்க்கும்போது, ஐந்தாவது வார்டிலும் அ.தி.மு.க., பெரும்பான்மையான ஓட்டுகளை பெறும்' என, வேட்பாளர் குப்பன் தெரிவித்தார்.

பிரசாரத்தில், ஏழாவது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் கார்த்திக் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலரும் பங்கேற்றிருந்தனர்.

Advertisement