காரைக்குடியில் இன்று விஜய் பிரசாரம் 37 நிபந்தனைகளுடன் அனுமதி மரங்களுக்கு 'பாதுகாப்பு கவசம்'

காரைக்குடி: காரைக்குடியில் த.வெ.க., தலைவர் விஜய் பிரசாரத்திற்கு 37 நிபந்தனைகளுடன் தேர்தல் அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர். மரங்கள், டிரான்ஸ்பார்மர்களில் தொண்டர்கள் ஏறுவதை தடுக்க த.வெ.க., சார்பில் தகரம் வைத்து மறைக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் போட்டியிடும் த.வெ.க., வேட்பாளர்களை ஆதரித்து காரைக்குடியில் இன்று விஜய் பிரசாரம் செய்கிறார். மதுரை விமான நிலையம் வரும் அவர், மதியம் 1:00 முதல் 2:00 மணிக்குள் காரைக்குடி வருகிறார். புது பஸ் ஸ்டாண்ட் அருகே தேவர் சிலை முன்பு பிரசாரம் செய்கிறார். பிரசாரத்திற்கு அனுமதி கோரி த.வெ.க., சார்பில்  தேர்தல் நடத்தும் அலுவலர், எஸ்.பி.,க்கு மனு அளிக்கப்பட்டது.

பிரசாரத்தின் போது 20 டாக்டர்கள், 200 தன்னார்வலர்கள் வாக்கி டாக்கியுடன் இருக்க வேண்டும். இலவச பொருட்கள் வழங்கக்கூடாது. அனுமதித்த மதியம் 12:00 மணி முதல் 2:30 மணிக்குள் பிரசாரம் செய்ய வேண்டும். போக்குவரத்திற்கு இடையூறு செய்யக்கூடாது. கண்ணதாசன் மணிமண்டபம், மாநகராட்சி அலுவலக நுாலகம் ஆகிய அரசு கட்டடங்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மின் கம்பிகள் இருப்பதால் மின்வாரிய ஊழியர்கள், தீயணைப்பு கருவிகள் கண்டிப்பாக இருக்கவேண்டும். 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களை பிரசாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது உள்ளிட்ட 37 நிபந்தனைகளுடன் தேர்தல் அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர்.

பிரசாரம் நடைபெறும் இடத்தில் தொண்டர்கள் மரங்களில் ஏறக்கூடாது என்பதற்காக அங்குள்ள 7 மரங்கள், டிரான்ஸ்பார்மரை சுற்றிலும் தடுப்பு அமைக்கப்பட்டது.

Advertisement