பட்டாவுக்கு லஞ்சம் வி.ஏ.ஓ.,வுக்கு 'காப்பு'

செஞ்சி: செஞ்சி அருகே, பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய, 5,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைதானார்.

விழுப்புரம் மாவட்டம், நடுநெல்லிமலையை சேர்ந்தவர் ரங்கநாதன், 22. இவர், 77 சென்ட் பரப்பளவுள்ள இடத்திற்கு பட்டா மாற்றம் செய்ய, ஏப்., 8ம் தேதி ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்தார்.

மேலும், பட்டா மாற்றம் செய்வது தொடர்பாக பாடிப்பள்ளம் வி.ஏ.ஓ., சிங்கார வடிவேல் என்பவரை அணுகினார். அவர், 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து, விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு ரங்கநாதன் புகாரளித்தார்.

போலீசாரின் அறிவுரைப்படி நேற்று, பாடிப்பள்ளம் வி.ஏ.ஓ., அலுவலகத்திற்கு சென்ற ரங்கநாதன், 5,000 ரூபாயை சிங்கார வடிவேலிடம் கொடுத்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், சிங்கார வடிவேலை கையும் களவுமாக பிடித்து, கைது செய்தனர்.

Advertisement