சபாஷ்: ஓட்டுப் பதிவு சதவீதம் உச்சம் தொட்டது; இமாலய சாதனைக்கு 6 காரணங்கள்; பரபரப்பான தகவல்கள் அம்பலம்

புதுச்சேரி:புதுச்சேரி சட்டசபை தேர்தலில் ஓட்டுப் பதிவு சதவீதம் புதிய உச்சத்தை தொட்டுள்ளதற்கான காரணங்கள் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. புதுச்சேரி தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு, 91.23 சதவீதம் என்ற இமாலய உச்சத்தை ஓட்டுப் பதிவு சதவீதம் நேற்று எட்டி உள்ளது. கடந்த 1969ம் ஆண்டு நடந்த முதல் சட்டசபை தேர்தலில் ஆரம்பித்து, நேற்றைய தினம் பதிவான ஓட்டுப் பதிவு சதவீதமே 'நம்பர் ஒன்' என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனைக்கு 6 காரணங்களை அரசியல் நோக்கர்கள் பட்டியலிடுகின்றனர்.

காசு மேல... காசு வந்து...கொட்டுகின்ற நேரம் இது...



இந்த தேர்தலில் இதுவரை இல்லாத அளவிற்கு வேட்பாளர்கள் பண மழையை பொழிய விட்டதே முதல் காரணமாகும். தேர்தலில் நிற்பதற்கு ஆசைப்பட்ட அரசியல்வாதிகள், கடந்த ஓராண்டாகவே சம்பந்தப்பட்ட தொகுதிகளில் வீடு வீடாக சென்று மிக்சி, கிரைண்டர், அண்டா, குண்டா என வீட்டு உபயோகப் பொருட்களை வழங்கி வந்தனர்.

தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகளின்போது இனிப்பு, சர்க்கரை, கரும்பு, வெல்லம், கேக் போன்றவற்றை விழாக்கால பரிசாக வழங்கினர்.

மேலும், மாதந்தோறும் பட்டியல் போட்டு அட்டை தந்து பரிசு பொருட்களை வீடு தேடி சென்று வழங்கியும் குஷிப்படுத்தினர்.

இதன் உச்சக்கட்டமாக, ஓட்டுக்கு ரூ.2 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.4 ஆயிரம் என வாரி வழங்கியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. சில தொகுதிகளில் 5 ஆயிரம் ரூபாய் வரை கூட ஓட்டுக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுமட்டுமல்லாமல், ரேஷன் கார்டு என்ற வகையில் கணக்கிட்டு குடும்பத்துக்கு 1,000 ரூபாய், 2000 ரூபாய் கொடுத்த செய்தியும் வெளியாகி உள்ளது.

இதை தவிர, தேர்தல் முடிந்த பிறகு கூட, தங்கக் காசு தருவோம், மிக்ஸி தருவோம், பிரிட்ஜ் தருவோம் என பரிசு கூப்பன்கள் மற்றும் டோக்கன்களை வினியோகம் செய்துள்ளனர்.

இதனால், மக்கள் கை நீட்டி வாங்கிய பரிசு பொருட்கள் மற்றும் பணத்திற்கு விசுவாசமாக இருந்து தவறாமல் தங்களது ஓட்டுகளை பதிவு செய்துள்ளனர்.

கை நீட்டி வாங்கிட்டோமேகேள்வி கேட்பார்களே?



வாக்காளர்களின் பயம் இரண்டாவது காரணமாகும். அதாவது, வேட்பாளர்கள் தந்த பணத்தையும், பொருட்களையும் வாங்கி விட்டோம், ஓட்டு போடவில்லை என்றால், வேட்பாளர்கள் கண்டுபிடித்து காரணம் கேட்பார்கள் என்ற பயம் மக்களிடம் இருந்துள்ளது.

மேலும், கொடுத்த பணத்தை திரும்ப பெற்று கொள்வார்களோ என்ற அச்சமும் மக்களிடம் இருந்திருக்கிறது. இந்த பயத்தின் காரணமாகவும், கும்பல் கும்பலாக வந்து தவறாமல் ஓட்டு போட்டுள்ளனர்.

ஆர்வம் காட்டியஇளம் வாக்காளர்கள்



முன்பு எப்போதும் இல்லாத வகையில், இந்த தேர்தலில் இளம் வாக்காளர்கள் அதிக ஆர்வமாக வந்து ஓட்டு போட்டதை காண முடிந்தது. குறிப்பாக, காலையில் ஓட்டுப் பதிவு துவங்கிய உடனேயே, முதல் முறையாக ஓட்டளிக்கும் இளைஞர்களும், இளம் பெண்களும் கும்பல் கும்பலாக வந்து ஓட்டு போட்டனர். இதுவும், ஓட்டு பதிவு சதவீதம் அதிகரித்ததற்கு முக்கிய காரணமாக உருவெடுத்துள்ளது.

வழக்கமாக, ஓட்டு போடுவதற்கோ, அரசியல் பற்றி தெரிந்து கொள்வதற்கோ துளியும் ஆர்வம் காட்டாமல், சினிமா, கிரிக்கெட் என தனி உலகத்தில் இளைய சமுதாயத்தினர் இருந்தனர். தற்போது ஓட்டளித்தற்கு விஜயும், அவர் துவக்கிய கட்சியுமே காரணம் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். இது, மூன்றாவது காரணமாகும்.

உண்மை வாக்காளர்களுக்குகை கொடுத்த எஸ்.ஐ.ஆர்.,



தற்போது ஓட்டுப் பதிவு அதிகரித்துள்ளதற்கு, வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணியே (எஸ்.ஐ.ஆர்.,) முக்கிய காரணம் என்றால் மிகையல்ல. வாக்காளர் பட்டியலில் காட்சி பொருளாக இருந்த இறந்த வாக்காளர்கள், இரண்டு இடங்களில் பெயர் வைத்திருந்த போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.

அதாவது, இறந்த வாக்காளர்கள் 20,798 பேர், இடம் பெயர்ந்த மற்றும் வீடுகளில் இல்லாத வாக்காளர்கள் 80,645 பேர், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இடம் பெற்று இருந்த 2024 பேர் என மொத்தம் 1,03,467 வாக்காளர்கள் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக, பழைய வாக்காளர் பட்டியலில் இருந்த 10 லட்சத்து 21 ஆயிரத்து 578 வாக்காளர்கள் என்ற எண்ணிக்கை, எஸ்.ஐ.ஆர்., திருத்த பணிக்கு பின், 9 லட்சத்து 18 ஆயிரத்து 111 ஆக குறைந்தது குறிப்பிடத்தக்கது. எனவே, புதுச்சேரியில் இல்லாத போலி வாக்காளர்களை முழுமையாக நீக்கி விட்டு, தகுதியான வாக்காளர்களை மட்டுமே ஜனநாயக திருவிழாவில் பங்கேற்க செய்ததால், ஓட்டு சதவீதம் எகிறி உள்ளது.

பட்டியலில் பெயரைநீக்கி விடுவார்களோ?



எஸ்.ஐ.ஆர்., பணியின்போதே, 1 லட்சம் பேரை நீக்கி விட்டனர். எனவே, ஓட்டு போடாமல் வீட்டிலேயே இருந்தால், அதிகாரிகள் கண்டுபிடித்து 'நோட்டீஸ்' கொடுத்து விளக்கம் கேட்பார்கள் என்ற அச்சம் பொது மக்கள் மத்தியில் பரவலாக உள்ளது. வாக்காளர் பட்டியலில் இருந்து தங்களை நீக்கி விட்டால், அரசின் நலத் திட்ட உதவிகளை பெற முடியாதே என்ற அச்சத்தில் ஓட்டுச்சாவடிக்கு ஓடி வந்து ஓட்டு போட்டுள்ளனர். இது, ஓட்டுப் பதிவு அதிகரித்துள்ளதற்கு ஐந்தாவது காரணமாகும்.


சூப்பர் ஏற்பாடுகள்அதிகாரிகளுக்கு சபாஷ்!



தேர்தல் பணியில் ஈடுபட்ட அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் அயராத முயற்சியும், உழைப்பும் ஓட்டுப் பதிவு அதிகரித்துள்ளதற்கு 6வது முக்கிய காரணமாகும். ஓட்டளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, அதிகாரிகள் ஓயாமல் உழைத்தனர். பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளையும் தொடர்ச்சியாக நடத்தினர்.

ஓட்டுச்சாவடிகளில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அனைத்து அடிப்படையான வசதிகளையும் ஏற்படுத்தி தந்தனர். குறிப்பாக, ஒவ்வொரு ஓட்டுச் சாவடியிலும் வாக்காளர்களை நீண்ட வரிசையில் காத்திருக்க வைக்காமல், உடனுக்குடன் ஓட்டளித்துவிட்டு செல்வதற்கான ஏற்பாடுகளை தேர்தல் துறை அதிகாரிகள் மிகவும் நேர்த்தியாக செய்திருந்தனர்.

அதாவது, பெரும்பாலான ஓட்டுச்சாவடிகளில் ஒரு நிமிடத்தில் ஓட்டு போட்டுவிட்டு வாக்காளர்கள் மகிழ்ச்சியாக வெளியே வந்தனர். குறிப்பாக, முதியோர்கள், உடல் நலம் பாதிக்கப்பட்டோ, கர்ப்பிணிகள், மாற்றுத் திறனாளிகள் நீண்ட வரிசையில் காத்திருக்காமல் உடனுக்குடன் ஓட்டு போட்டு விட்டு சென்றனர். ஒட்டுமொத்தமாக, ஓட்டுப் பதிவு சதவீதம் எகிறி உள்ளதற்கு தேர்தல் துறையினரி ன் சூப்பர் ஏற்பாடுகளும் முக்கிய காரணமாக மாறியது.

Advertisement