ஓட்டு போட்டதை படம் எடுத்து வலைதளத்தில் பரப்பியவர் மீது வழக்கு

புதுச்சேரி: மணலிப்பட்டு ஓட்டுச்சாவடியில் ஓட்டு போட்டதை மொபைலில் படம் எடுத்து சமூக வலைதளத்தில் பரப்பிய நபர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

புதுச்சேரி சட்டசபை தேர்தலிலுக்கான ஓட்டுப்பதிவு நேற்று முன்தினம் நடந்தது. இதில், வாக்காளர்கள் ஓட்டுச்சாவடிக்குள் மொபைல் போன் எடுத்து செல்ல தேர்தல் துறை தடை வித்திருந்தது.

இந்நிலையில், மண்ணாடிப்பட்டு தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் சார்பாக பா.ஜ., வேட்பாளராக போட்டியிடும் நமச்சிவாயத்திற்கு ஓட்டு அளித்ததற்கான ஓட்டுப்பதிவு இயந்திரம் மற்றும் வி.வி.பாட் படம் சமூக வலைதளத்தில் பரவியது.

இதையடுத்து, தேர்தல் துறை, தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி மூலம் ஓட்டு அளித்ததை படம் எடுத்து சமூக வலைதளத்தில் பரப்பியது யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

அதில், மண்ணாடிப்பட்டு தொகுதி, மணலிப்பட்டு ஓட்டுச்சாவடியில், அதே கிராமத்தை சேர்ந்த பாண்டுரங்கன், 46; என்பவர், தனது மொபைல் போனை மறைத்து எடுத்து சென்று, தான் ஓட்டு அளித்ததை படம் எடுத்து பதிவிட்டது தெரியவந்தது.

இதுகுறித்து ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர் ஹெலன் ராணி அளித்த புகாரின் பேரில், பாண்டுரங்கன் மீது திருக்கனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement