சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டு 91.23 சதவீதம் புதுச்சேரி தேர்தல் வரலாற்றில் புதிய சாதனை

புதுச்சேரி: புதுச்சேரியில் நேற்று நடந்த சட்டசபை தேர்தலில் முன் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு 91.23 சதவீத ஓட்டுகள் பதிவாகி வரலாற்று சாதனை படைத்துள்ளது. இதுவரை உச்சபட்சமாக இருந்த கடந்த 2011 ஆண்டு சாதனையை தகர்த்து கூடுதலாக 4.30 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளது. தபால் ஓட்டுகள் சேர்த்தால் ஓட்டுப் பதிவு மேலும், அதிகரிக்கும்.

புதுச்சேரியின் 16வது சட்டசபைக்கான தேர்தல் அறிவிப்பு கடந்த 15ம் தேதி வெளியானது. இத்தேர்தலுக்கான மனு தாக்கல் கடந்த 16ம் தேதி முதல் 23ம் தேதிவரை நடந்தது. 26ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

நான்கு முனை போட்டி மொத்தமுள்ள 30 தொகுதிகளுக்கு 117 சுயேச்சைகள் உட்பட 294 பேர் போட்டியிடுகின்றனர்.ஆளும் என்.ஆர்.காங்., பா.ஜ., கூ ட்டணி, தி.மு.க., - காங்., இண்டி கூட்டணி, நடிகர் விஜயின் த.வெ.க., மற்றும் சீமானின் நா.த.க., இடையே நான்கு முனை போட்டி ஏற்பட்டுள்ளது.வேட்பாளர்கள் கடந்த 26ம் தேதி முதல் கடந்த இரு வாரமாக வீதி, வீதியாக சென்று தீவிர பிரசாரம் மேற்கொண்டு ஓட்டு சேகரித்தனர். கடந்த 7ம் தேதி பிரசாரம் நிறைவு பெற்றது.

1,099 ஓட்டுச் சாவடி இத்தேர்தலில் மாநிலத்தில் மொத்தமுள்ள 9,50,639 வாக்காளர்கள் ஓட்டு போடுவதற்காக 1,099 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டது. ஓட்டுப்பதிவிற்காக தலா 1099 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் வி.வி.பேட் இயந்திரங்கள் நேற்று முன்தினம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஓட்டுச் சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

4,836 ஊழியர்கள் தேர்தல் பணியில் 4,836 அரசு ஊழியர்கள், ஓட்டுச்சாவடி பாதுகாப்பு பணியில் 2,791 போலீசார் , பல்நோக்கு மற்றும் தன்னார்வலர்கள் 2,198 பேர் ஈடுபட்டிருந்தனர்.

மாதரி ஓட்டுப்பதிவு தேர்தல் ஆணைய உத்தரவின்படி அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும் நேற்று காலை 5:30 மணிக்கு அனைத்து வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மாதிரி ஓட்டுப்பதிவு நடைபெற்றது. ஒவ்வொரு வேட்பாளருக்கும் ஒரு ஓட்டு செலுத்தி 50 மாதிரி ஓட்டுகள் முகவர்களின் முன்னிலையில் கட்டுப்பாட்டு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகளை, வாக்காளர் சரி பார்க்கக்கூடிய காகித ஆய்வுத் தட இயந்திரத்தில் பதிவான ஓட்டுகளையும் சரிபார்த்து, உறுதி செய்த பின், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் 'சீல்' வைக்கப்பட்டது.

புதிய சாதனை அதனைத் தொடர்ந்து காலை 7 மணிக்கு அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும் ஓட்டுப்பதிவு துவங்கியது. காலை முதல் வாக்காளர்கள் ஆர்வத்துடன் காலை முதல் மாலை 6 மணி வரை ஓட்டு போட்டனர். அதன் விளைவாக இத்தேர்தலில் 91.23 சதவீத வாக்குகள் பதிவானது. இதுவே புதுச்சேரி தேர்தல் வரலாற்றிலேயே புதிய சாதனை ஆகும். இது கடந்த 2011ல் பதிவான 85.57 சதவீதத்தை விட 4.30 சதவீத ஓட்டுகள் கூடுதலாகும்.

இதற்கு முன்பு 1974-ல் 85.33 சதவீதமும் 2006-ல் 85.29 சதவீதமும் 2011-ல் 85.57 சதவீதமுமே அதிக ஓட்டுப்பதிவாகும். இதில் 2011ல் பதிவான 85.57 சதவீத ஓட்டு பதிவே அதிகமாகும்.

மேலும் அதிகரிக்கும் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தேர்தல் மற்றும் அத்தியாவசியப் பணியில் ஈடுபட்டிருந்த அரசு ஊழியர்கள் 12,936 பேர் தபால் மூலம் வாக்களித்துள்ளனர். மேலும், சேவை ஊழியர்கள் 328 பேருக்கு தபால் வாக்குகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவை திரும்ப செலுத்த ஓட்டு எண்ணிக்கை நாளான வரும் 4ம் தேதி காலை 8 மணிவரை கால அவகாசம் உள்ளது. தபால் ஓட்டுகள் மூலம் ஓட்டு சதவீதம் மேலும் கூடும்.

மக்கார் இயந்திரங்கள் நேற்று காலை நடந்த மாதிரி ஓட்டுப்பதிவின் போது சரிவர செயல்படாத 5 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 10 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 46 வி.வி.பேட் இயந்திரங்கள் மாற்றப்பட்டது. தொடர்ந்து நடந்த ஓட்டுப் பதிவின் போது சரிவர இயங்காத 8 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 8 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 42 வி.வி.பேட் இயந்திரங்கள் மாற்றி, தொடர்ந்து ஓட்டுப்பதிவு நடைபெற்றது.

ரூ.1.18 லட்சம் பறிமுதல் ஓட்டுப்பதிவு நாளான நேற்று ட்ரோன் கண்காணிப்பின் உதவி யோடு வில்லியனூர், காலாப்பட்டு, உழவர்கரை, மணவெளி மற்றும் காரைக்கால் ஆகிய சட்டசபை தொகுதிகளில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததை கண்டறிந்து பறக்கும் படை மூலம் ரூ.1,18,400 பறிமுதல் செய்யப்பட்டது.

சீல் வைப்பு மாலை 6 மணிக்கு ஓட்டுப்திவு முடிந்ததும், ஒவ்வொரு ஓட்டுச் சாவடிகளிலும், வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைத்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் லாஸ்பேட்டையில் உள்ள ஓட்டு எண்ணம் மையங்களில் வைத்து சீல் வைக்கப்பட்டது.

ஓட்டு எண்ணும் மையங்களுக்கு மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Advertisement