எம்.ஜி.ஆர்., கோவிலில் வழிபட்ட தி.மு.க., அமைச்சர் துரைமுருகன்

22

காட்பாடி: அ.தி.மு.க., ஓட்டு களை குறி வைத்து, எம்.ஜி.ஆர்., கோவிலில் அமைச்சர் துரைமுருகன் வழிபட்டார்.

வேலுார் மாவட்டம் காட்பாடி அடுத்த தொண்டான்துளசி கிராமத்தில், அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., ரகுபதியின் மகன் முரளி, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு கோவில் கட்டியுள்ளார்.

இந்த கோவிலில், நேற்று முன்தினம் இரவு, காட்பாடி தொகுதி தி.மு.க., வேட்பாளரான அமைச்சர் துரைமுருகன் தரிசனம் செய்தார். கோவிலில் எம்.ஜி.ஆர்., சிலைக்கு, துரைமுருகன் மாலை அணிவித்து மலர் துாவி மரியாதை செய்தார்.

பின், துரைமுருகன் கூறுகையில், “எம்.ஜி.ஆரின் நற்குணங்கள் மற்றும் ஈகை குணம் பற்றி அனைவரும் அறிவர். யாராவது அவருக்கு துன்பம் கொடுத்தால் கூட, அடுத்த நாளே அதை மறந்து அவரோடு நட்பாகப் பழகக் கூடியவர்.

''அரசியலில் எதிர் துருவங்களாக இருந்தாலும், மனிதநேயம் மற்றும் தனிப்பட்ட நட்புக்கு, எம்.ஜி.ஆர்., - கருணாநிதி இருவருமே முக்கியத்துவம் கொடுத்தனர்,” என்றார்.

அ.தி.மு.க., ஓட்டுகளை குறி வைத்தே, எம்.ஜி.ஆர்., கோவிலுக்கு துரைமுருகன் சென்றதாக கூறும் தி.மு.க.,வினர், 'நடிக்க ஆசைப்பட்ட துரைமுருகனை, சட்டம் படிக்க வைத்தவர் எம்.ஜி.ஆர்., அதனால், தான் எம்.ஜி.ஆர்., கோவிலுக்கு சென்றார்.

'கடந்த 1984 தேர்தலில் தன்னை தோற்கடித்த அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., ரகுபதியின் மகன் முரளி கட்டிய கோவிலில் துரைமுருகன் வழிபட்டது, அ.தி.மு.க., மற்றும் எம்.ஜி.ஆரின் தீவிர விசுவாசிகளின் ஓட்டுகளையும் குறி வைத்து தான்' என்றனர்.

இதற்கிடையே, கடந்த தேர்தலில் துரைமுருகனிடம் வெறும் 746 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த ராமு, இந்த முறையும் அ.தி.மு.க., வேட்பாளராக போட்டியிடுகிறார்.

இந்த முறை, அவர் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருவதால், எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் துரைமுருகன் இருக்கிறார் என அ.தி.மு.க.,வினர் தெரிவித்தனர்.

Advertisement