இறந்தவர்கள், ஜெயிலுக்கு போனஆசிரியர்களுக்கு தேர்தல் பணி உத்தரவு:   'ஆப்சென்ட்' குறித்து விளக்கம் கேட்டபோது அதிர்ச்சி

மதுரை: மதுரையில் இறந்த, ஜெயிலில் உள்ள ஆசிரியர்களுக்கும் தேர்தல் பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.

சட்டசபை தேர்தலையொட்டி துறைவாரியாக அரசு அலுவலர்களுக்கு தேர்தல் பணிகள் ஒதுக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. 80 சதவீதம் பள்ளி, கல்லுாரி ஆசிரியர்களுக்கு சம்பளம் நிர்ணயம், பணிநிலை அடிப்படையில் ஓட்டுச் சாவடி தலைமை அலுவலர் (பி.ஓ.,) பி.ஓ.,1 முதல் பி.ஓ.,3 என பணிகள் ஒதுக்கப்படும்.

தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி அனைத்து மாவட்டங்களிலும் சட்டசபை தொகுதிகள் வாரியாக ஏப்.,2 ல் முதற்கட்ட தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடந்தன. மதுரையில் முதற்கட்ட பயிற்சியில் ஆசிரியர் தரப்பில் 1600க்கும் மேற்பட்டோர் பங்கேற்கவில்லை. இதனால் பங்கேற்காதவர்களுக்கு விளக்கம் கேட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. விசாரணைக்குழு அமைத்து தொகுதிவாரியாக 'ஆப்சென்ட்' ஆசிரியர்களிடம் விசாரணை நடந்தது.

அப்போது, தேர்தல் கமிஷன் விலக்கு அளித்துள்ள, மாற்றுத்திறனாளி (40 சதவீதம் மேல் பாதிப்பு), கண் பார்வை குறைபாடு, பணியில் இருந்து ஓய்வு பெற 6 மாதங்கள் உள்ளோர், கர்ப்பிணி, ஒரு வயதுக்கு குறைவான பாலுாட்டும் தாய்மார், இதய நோய் பாதிப்பு உள்ளோருக்கும் பயிற்சியில் பங்கேற்கும் உத்தரவு அனுப்பப்பட்டிருந்தது தெரியவந்தது.

ஓய்வு பெற்ற, இறந்த, குற்ற வழக்கில் ஜெயலிலுக்கு சென்ற ஆசிரியர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது தெரிந்தது. விசாரணையில் அதற்குரிய ஆவணங்களை விசாரணை குழுவிடம் ஆசிரியர்கள் சமர்ப்பித்தனர். ஆனால் ஆவணங்கள் சமர்ப்பித்த 90 சதவீதம் பேருக்கு மீண்டும் இரண்டாம் கட்ட பயிற்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதை கண்டித்து இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பாண்டி, நிதிகாப்பாளர் சீனிவாசன் கூறியதாவது: தேர்தல் பணியில் ஆசிரியர்களை தான் அதிக எண்ணிக்கையில் ஈடுபடுத்துகின்றனர். பணியை மகிழ்ச்சியாக மேற்கொள்வதற்கு பதில் மனஉளைச்சலில் மேற்கொள்ளும் வகையில் உத்தரவுகள், அதிகாரிகள் கெடுபிடி உள்ளது.

மேலுார், மதுரை தெற்கு சட்டசபை தொகுதிகளில் இறந்தவர், ஓய்வு பெற்றவர்களுக்கும், உசிலம்பட்டி தொகுதியில் மதுரை ஜெயிலில் தண்டனை கைதியாக உள்ள ஆசிரியைக்கும் தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்க உத்தரவு பிறப்பிக்கபட்டதும் தெரியவந்தது.

அலட்சியமாக உத்தரவை பிறப்பித்தோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் கமிஷன் அனுமதிக்கு உட்பட்டு விலக்கு கேட்ட ஆசிரியர்களுக்கு உடன் தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றனர்.

Advertisement