திருப்புவனத்தில் ஹைபிரிட் வெள்ளரி சாகுபடி: நவீன தொழில்நுட்பத்தில் சாதிக்கும் விவசாயி

திருப்புவனம்:சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே பாப்பான்குளம் விலக்கில் கட்டிகுளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கணேசன் ஹைபிரிட் வெள்ளரி சாகுபடி செய்து சாதித்து வருகிறார்.

கட்டிகுளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கணேசன் 60, பெரும்பாலும் நெல் விவசாயம் செய்து வந்தவர் முதன் முறையாக தேனி மாவட்டத்தில் விளைவிக்கப்படும் ஹைபிரிட் வெள்ளரி தோட்டத்தை பார்த்து பயிற்சி பெற்று விவசாயத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு ஏக்கர் பரப்பளவில் ஷெட் அமைத்து உட்புற நிழலில் ஹைபிரிட் வெள்ளரியை சாகுபடி செய்து வருகிறார்.

சொட்டு நீர் பாசனம் மூலம் குறைந்த தண்ணீரில் ஹைபிரிட் வெள்ளரி செடியை வளர்த்து வருகிறார். நடவு செய்த 30வது நாளில் இருந்து வெள்ளரி அறுவடை தொடங்குகிறது. ஒரு நாள் விட்டு ஒருநாள் ஏக்கருக்கு 200 டன் வரை அறுவடை செய்கின்றனர். இதில் கழிவு 20 சதவிகிதம் வரை இருக்கும், ஒருகிலோ விதை 12 ஆயிரம் ரூபாய், ஒன்பதாயிரத்து 400 விதைகள் வரை இருக்கும், விளை நிலத்தை உழவு செய்து கரும்பு சாகுபடிக்கு செய்வது போல பாத்தி கட்டி விடுகின்றனர்.

ஷெட் போன்ற அமைப்பின் மேற்பகுதியில் இருந்து தரை வரை வலை அமைக்கப்படுகிறது. வலைகளை கீழ் இருந்து மேலே வரை சுருட்டும்படி அமைக்கப்பட்டுள்ளது. விதை நடவு செய்த 10 நாட்கள் கழித்து வலை கீழே இறக்கப்பட்டு ஒவ்வொரு பாத்தியிலும் வைத்து கட்டுகின்றனர். வளர்ந்த கொடிகளை அப்படியே வலை மீது படர விட்டபின் 30 நாட்களில் பிஞ்சுகள் வெளி வருகின்றன. தினசரி கூலி ஆட்கள் மூலம் ஏணி வைத்து அறுவடை செய்து அட்டைப்பெட்டியில் பேக்கிங் செய்து அனுப்புகின்றனர்.

வெள்ளரியை அட்டை பெட்டியில் அடுக்கும் போதே தரமான வெள்ளரியை மட்டும் தேர்வு செய்கின்றனர். ஒவ்வொரு வெள்ளரியும் 200 கிராமிற்கு மேல் இருக்க வேண்டும். ஏக்கருக்கு 150 முதல் 200 டன் வரை கிடைக்கும், சீசனை பொறுத்து கிலோ எட்டு ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விலை போகும்.

கோடை காலங்களில் விளைச்சல் அதிகமாக இருக்கும்.விலையும் கிலோவிற்கு 20 ரூபாய் வரை கிடைக்கும். மூன்று மாதங்கள் வரை அறுவடை நடைபெறும் அதன்பின் நடவு செய்த கொடிகளை அகற்றி விட்டு மீண்டும் உழவு செய்து புதிய விதைகளை பயிரிட வேண்டும்.

விவசாயி கணேசன் கூறுகையில்,

ஒரு ஏக்கரில் ஷெட் அமைத்து ஹைபிரிட் வெள்ளரி பயிரிட எழுபது லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளேன், தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் அரசின் மான்யம் 16 லட்ச ரூபாய் வரை வழங்க ஏற்பாடு செய்து தந்தனர். நவீன தொழில்நுட்பம் மூலம் ஹைபிரிட் வெள்ளரி சாகுபடி செய்யப்படுகிறது. வெள்ளரி விதை மற்றும் அறுவடை செய்த வெள்ளரிக்கு உரிய விலை உள்ளிட்டவைகள் நிரந்தரமாக கிடைக்க வேண்டும்,அப்போதுதான் செலவு செய்த பணத்தை எடுக்க முடியும், ஹைபிரிட் வெள்ளரி விதைகளை விற்பனை செய்பவர்களே அறுவடை செய்த ஹைபிரிட் வெள்ளரிகளை வாங்கி கொள்கின்றனர். என்றார்.

Advertisement