மூலிகைகளை பாதுகாப்பது அவசியம்: பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் அறிவுரை

பந்தலுார்: பந்தலுார் டியூஸ் மெட்ரிக் பள்ளியில், தேசிய பசுமை படை சார்பில் மருத்துவ குணம் நிறைந்த தாவரங்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்த, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

பள்ளி முதல்வர் சுசீந்திரநாத் வரவேற்றார். தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் சிவதாஸ் பள்ளி வளாகத்தில் இருந்த மூலிகை செடிகளை சேகரித்து பேசுகையில், ''மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில், வளம் நிறைந்த மழை காடுகள் கூடலுார் வனக்கோட்டத்தில் உள்ளன. பழங்குடியின மக்களின் பாரம்பரிய, வைத்தியங்களில் உள்ளூரில் காணப்படும் மூலிகை செடிகள் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.

இவற்றை பாதுகாக்க வனத்துறை, தோட்ட கலைத்துறை மற்றும் சமூக நல அமைப்புகள் சார்பில் முயற்சி மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது. இப்பணியில் மாணவ சமுதாயம் முன் பெற வேண்டியது அவசியமாகும்,'' என்றார்.

தொடர்ந்து, கூடலுார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய பொதுச் செயலாளர் சிவசுப்பிரமணியம், பேசுகையில், ''மாணவர்கள் விடுமுறை நாட்களில், தங்கள் வீட்டு தோட்டங்களில் மூலிகை தோட்டம் மற்றும் பூந்தோட்டம், இயற்கை முறையில் காய்கறி தோட்டங்களை உருவாக்க முயற்சி மேற்கொண்டால் பயனாக இருக்கும்,'' என்றார். ஆசிரியர் விக்னேஸ்வரன் நன்றி கூறினார்.

Advertisement