நுாற்றாண்டைக் கடந்த புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளி மக்களின் நன்மதிப்புடன் திண்டிவனத்தின் அடையாளமாக திகழ்கிறது

திண்டிவனம்: திண்டிவனத்தில், கடந்த 1902ல் துவங்கப்பட்ட புனித அன்னாள் பள்ளி, கடந்த 2002ல் நுாற்றாண்டை கடந்து சிறப்புடன் செயல்பட்டு வருகிறது.

திண்டிவனம் பங்கு சார்பில் 1902ல் ஆரம்ப பள்ளியாக துவங்கப்பட்டது, 1904ம் ஆண்டு முதல் கபிரியேல் சகோரர்களால் நடத்தப்பட்டது. அயர்லாந்திலிருந்து வேத போதகராக வந்த தென்னிந்தியாவின் அப்போஸ்தலர் என்று போற்றப்படும் அருள்தந்தை தாமஸ் கவான் டபி அடிகள் 1921ல் இந்த பள்ளியை தனது பொறுப்பில் ஏற்றுக்கொண்டு, நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தினார்.

பள்ளியில் மாணவர்கள் தங்கி படிக்க புனித அன்னாள் உள் விடுதியையும் அமைத்தார்.

நடுநிலைப்பள்ளியாக இருந்த இப்பள்ளியை, மைக்கேல் கார்டின் அடிகள் 1944ல் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வழிவகை செய்தார். 1960ல் அரசின் உதவி இன்றி ஏழை மாணவர்களுக்கு மதிய உணவு திட்டம் தொடங்கப்பட்டது. 1975ல் புனித அன்னாள் ஆங்கிலப்பள்ளி தொடங்கப்பட்டது. 1978ல் உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. அந்த ஆண்டில் கரோப் பிளாக் என்ற பெயரில் 8 வகுப்பறைகள் புதிதாக கட்டப்பட்டது.

கடந்த 2002ல் நுாற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இதன் நினைவாக பள்ளியில் நுாற்றாண்டு விழா நினைவு மணி மண்டபம், பள்ளி வளாகத்தில் புனித அன்னம்மாள் திருஉருவச் சிலை அமைக்கப்பட்டது.

பள்ளி ஆசிரியர் பிரான்சிஸ், தேசிய நல்லாசிரியர் விருது பெற்றுள்ளார். இதேபோல் மாநில அரசு வழங்கும் நல்லாசிரியர் விருது, சவரிமுத்து, ஆரோக்கியசாமி, கணேசன், புருேஷாத்தமன், சிவக்குமார் ஆகியோர் பெற்றுள்ளனர்.

பள்ளியில் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி, முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சண்முகம், முன்னாள் எம்.எல்.ஏ., மாசிலாமணி, செங்கல்பட்டு கலெக்டராக இருந்த நீதிதாஸ், தமிழக முன்னாள் பார் கவுன்சில் தலைவர் பால் கனகராஜ் ஆகியோர் படித்துள்ளனர். பள்ளியில் படித்த 150க்கு மேற்பட்ட மாணவர்கள் அருட்பணியாளர்களாக (குருக்கள்) உள்ளனர்.

திண்டிவனத்தில் அரசு நிதியுதவி பள்ளியாக நுாற்றாண்டைக் கடந்த செயல்பட்டு வரும் புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளி, ஏழை மற்றும் விளிம்பு நிலையிலுள்ள பல மாணவர்களின் கல்வித்திறனை உயர்த்தி, அவர்கள் வாழ்வில் உயர்பதவிகளை பெறுவதற்கு அடித்தளமாக அமைந்து, மக்களின் மனதில் நன்மதிப்பை பெற்று சிறந்து விளங்குகின்றது.





பேட்டி...



திண்டிவனத்தின் அடையாளம்

இந்தியா சுதந்திரம் வாங்குவதற்கு முன், திண்டிவனத்தில் துவக்கப்பட்டது புனித அன்னாள் பள்ளி. நகரத்திற்கு பெருமை சேர்க்கும் பள்ளியாக புனித அன்னாள் மேல்நிலைபள்ளி சிறந்து விளங்குகிறது. இந்த பள்ளியில் படித்த மாணவர்கள் பலர் மத்திய அமைச்சர், மாநில அமைச்சர், எம்.எல்.ஏ.,க்கள் என பல்வேறு பதவிகளை அலங்கரி்தது பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். நுாற்றாண்டைக் கடந்தும் இன்றளவும் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது. அரசு நிதியுதவி பெறும் பள்ளியாக இருப்பதால், நகரத்தில் ஏழை மாணவர்கள் அதிகம் பேர் இந்த பள்ளியில் படித்து வருகின்றனர். கல்வி மற்றும் ஒழுக்கத்தை கடைபிடிப்பதில் முதலிடத்தை பிடித்துள்ள இப்பள்ளி திண்டிவனத்தின் அடையாளமாக திகழ்கிறது. -சுப்ராயலு, தொழிலதிபர்.

Advertisement