ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் 'லீக்' :ரஜினி உட்பட பிரபலங்கள் கண்டனம்

சென்னை:ஜனநாயகன் திரைப்படம், தியேட்டரில் வெளியாவதற்கு முன்பே, இணையத்தில் வெளியானதற்கு, ரஜினி உள்ளிட்ட திரை பிரபலங்கள், கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அதன் விபரம்:

* நடிகர் ரஜினிகாந்த்: ஜனநாயகன் திரைப்படம், இணையத்தில் யாராலோ வெளியிடப்பட்டிருப்பது, அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. திரை அமைப்புகள், இதற்கு எதிராக குரல் எழுப்பி, அரசு இதை செய்தவர்களை கண்டுபிடித்து, கடுமையான தண்டனை அளிக்க வேண்டும். இது போன்ற குற்றம், இனியும் தொடரக்கூடாது.

* நடிகர் சூர்யா: இது, மனதை உடைக்கும் அநீதி. தயவு செய்து, ஜனநாயகன் திரைப்படத்தை, இணையதளத்தில் பார்க்கவோ, பகிரவோ அல்லது இதைப்பற்றி பேசவோ வேண்டாம். அவர்களின் உழைப்பிற்கு மதிப்பு கொடுங்கள். என் நண்பர்களுக்கு ஆதரவாக நான் நிற்கிறேன். இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறேன். இது, மன்னிக்க முடியாதது.

* நடிகர் சிவகார்த்திகேயன்: ஒவ்வொரு திரைப்படமும், ஒவ்வொருவரின், ஆசை, ரத்தம், வியர்வையால் உருவாகிறது. தயவு செய்து, இணையதளத்தில் வெளியான பிரதியை தவிர்க்கவும். திரையரங்கில் வெளியாகும் வரை காத்திருந்து, அங்கு பார்த்து ரசியுங்கள். இந்த சம்பவத்துக்கு பொறுப்பானவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேபோல, விஷால், கார்த்தி, இயக்குனர் வெங்கட்பிரபு உட்பட ஏராளமான திரை பிரபலங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.



***

Advertisement