பவுண்டரி பொருட்கள் விலை 10 சதவீதம் அதிகரிப்பு: மூலப்பொருள் விலை ஏற்றம் எதிரொலி
கோவை: மூலப்பொருட்கள் விலை உயர்வு காரணமாக பவுண்டரி உற்பத்தி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்தப்படுவதாக குறு சிறு பவுண்டரி அதிபர்கள் சங்கம் அறிவித்துள்ளனர்.
கோவை குறு சிறு பவுண்டரி அதிபர்கள் சங்கத்தின் ('காஸ்மாபேன்') அவசர ஆலோசனை கூட்டம் கோவையில் நடைபெற்றது. இதுகுறித்து காஸ்மாபேன் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை;
கடந்த 45 ஆண்டுகளாக கோவை மாவட்டத்தில் பவுண்டரி தொழில் மூலம் நேரடியாக 2 லட்சம் தொழிலாளர்களும், மறைமுகமாக 5 லட்சம் தொழிலாளர்களும் பயன் பெறுகிறார்கள். இதில் ஆண்டுதோறும் சுமார் ரூ.2,500 கோடிக்கு வர்த்தகம் நடைபெறுகிறது.
பவுண்டரி தொழிலுக்கு தேவையான மூலப்பொருட்களின் விலை 20 சதவீதம் அதிகரித்துள்ளது. துணை பொருட்களின் விலை 20 - 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதனால் சிறு மற்றும் குறு பவுண்டரிகள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றன. தொழிலைத் தொடர்ந்து நடத்த முடியாத இக்கட்டான சூழல் நிலவுகிறது.
இந்த நெருக்கடியை சமாளிக்கும் விதமாக, பவுண்டரிகளில் உற்பத்தி செய்யப்படும் 'காஸ்டிங்' பொருட்களின் விலையை, 10 சதவீதம் உயர்த்த முடிவு செய்துள்ளோம். இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வருகிறது.
மூலப்பொருட்கள் மற்றும் துணைப் பொருட்களின் விலையேற்றத்தை அரசு கட்டுப்படுத்த வேண்டும். அரசூர் மற்றும் மாணிக்கம்பாளையம் பவுண்டரி கிளஸ்டர்களில் அரசு சார்பில் 'மூலப்பொருள் வங்கி' அமைத்து தர வேண்டும். குறு பவுண்டரிகளுக்கான ஜிஎஸ்டி வரியை தற்போதுள்ள 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.