தேர்தல் பணி செய்பவர்கள் 15ல் தபால் ஓட்டு போடலாம்

கோவை: கோவை மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கான 2ம் கட்ட பயிற்சி வகுப்பு, 15ம் தேதி (புதன்கிழமை) நடக்கிறது. அன்றைய தினம், தபால் ஓட்டு பதிவு செய்வதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

கோவை மாவட்டத்தில், 3,540 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்படும். தேர்தல் பணியில் 17,102 அலுவலர்கள் ஈடுபடுவர். இவர்களுக்கு மட்டுமின்றி, பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார், மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கு மேற்பட்டோர், அத்தியாவசிய பணியில் ஈடுபடுவோருக்கு தபால் ஓட்டு போடும் வசதி செய்யப்பட்டு உள்ளது.

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த வாக்காளர்களில், 28,028 பேர் தபால் ஓட்டு போடுவதற்கு விருப்பம் தெரிவித்து, படிவம் 12 மற்றும் படிவம் 12டி வழங்கியுள்ளனர். மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கு மேற்பட்டோர் வீட்டுக்குச் சென்று தபால் ஓட்டு பெற்றும் நிகழ்வு (12ம் தேதி) துவங்கி, 14 வரை நடக்கிறது.

தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கான 2ம் கட்ட பயிற்சி வகுப்பு, 15ம் தேதி (புதன்கிழமை) அந்தந்த சட்டசபை தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தலைமையில் நடைபெறும். அப்போது, அவர்கள் தபால் ஓட்டு போடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார் தபால் ஓட்டு போடுவதற்கான தேதி, பின்னர் அறிவிக்கப்படும் என தேர்தல் பிரிவினர் தெரிவித்தனர்.

Advertisement