கழிப்பறை வசதி இல்லா ஓட்டுச்சாவடி

மேலுார்: கச்சிராயன் பட்டியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக கட்டிய கழிப்பறையில் தண்ணீர் இல்லாததால் சுகாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. அருகிலுள்ள அங்கன்வாடி மையத்தில் ஓட்டுச்சாவடி செயல்பட உள்ளதால் அங்கு வருவோருரும் சிரமப்படுவர்.

கச்சிராயன்பட்டி மத்தியில் ஊராட்சி, தபால், வி.ஏ.ஓ., அலுவலகங்கள், துவக்கப்பள்ளி, துணை சுகாதார நிலையம் செயல்படுகின்றன. இங்குள்ள ஊழியர்கள், பொதுமக்கள், மாணவர்களுக்காக ஊராட்சி அலுவலகம் அருகே கழிப்பறை கட்டப்பட்டது.

இதனைப் பயன்படுத்த தண்ணீர் இல்லாததால் மக்கள் பெரிதும் அவதியுறுகின்றனர். இதனருகே அங்கன்வாடி மையம் உள்ளது. இங்கு தேர்தலுக்கான ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் கழிப்பறை இல்லை. இதனால் அருகில் உள்ள பள்ளி மற்றும் இக்கழிப்பறையை நம்பி இருக்க வேண்டியுள்ளது.

சமூக ஆர்வலர் மணிவேல் கூறியதாவது : ரோடு பணிநடந்தபோது ஆழ்குழாயில் இருந்து பிளாஸ்டிக் தொட்டிக்கு செல்லும் குழாய்களை உடைத்து விட்டனர். அதனால் கழிப்பறையின் மேல் உள்ள பிளாஸ்டிக் தொட்டிக்கு தண்ணீர் வரவில்லை. இதனால் இக்கழிப்பறையை பயன்படுத்தியவர்கள் சிரமப்படுகின்றனர். இது குறித்து கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியும், ஒன்றியத்தில் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் கழிப்பறையை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றார்.

Advertisement