மேற்கு தொகுதியில் பட்டா பிரச்னைக்கு தீர்வு: வேட்பாளர் பாலாஜியை ஆதரித்து அமைச்சர் மூர்த்தி பிரசாரம்

மதுரை: மதுரை சோலையழகுபுரம் பகுதி மக்களுக்கு பல ஆண்டுகளாக வீட்டுமனைப் பட்டா பெற முடியாத பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என அமைச்சர் மூர்த்தி உறுதியளித்தார்.

மேற்கு தொகுதி தி.மு.க., வேட்பாளர் பாலாஜிக்கு ஆதரவாக சோலையழகுபுரம், ஜெய்ஹிந்துபுரம், ஜீவா நகர் உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர் மூர்த்தி பிரசாரம் செய்தார். அவருக்கு அப்பகுதி மக்கள் பூத்துாவியும், ஆரத்தி எடுத்தும் வரவேற்றனர்.

பிரசாரத்தில் மூர்த்தி பேசியதாவது:இப்பகுதியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு 15 ஆண்டுகளாக வீட்டுமனை பட்டா கிடைக்காமல் போராடுகின்றனர். இத்தொகுதியில் இரண்டு முறை அமைச்சராக இருந்த அ.தி.மு.க., வேட்பாளர் செல்லுார் ராஜூ இதற்கு தீர்வுகாணவில்லை. இதுதொடர்பாக வழக்கு உள்ளது. தி.மு.க., மீண்டும் ஆட்சி அமைத்து அனைவருக்கும் பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு நானே பொறுப்பு.

இதுபோல் மாநகராட்சி முழுவதும் பாதாளச் சாக்கடை கட்டமைப்பு மாற்றியமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் பாதாளச் சாக்கடை உடைப்பு பிரச்னை முடிவுக்கு வந்துவிடும். இத்தொகுதிக்கு உட்பட்ட மத்திய சிறை மாற்றப்பட்டு, அந்த இடத்தில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும். அதை விரைவில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பார். மகளிருக்கு உரிமை தொகை, இலவச பஸ் பயணம் உள்ளிட்ட திட்டங்கள் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்கிறது. முதல்வர் ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்த இத்தொகுதி வேட்பாளர் பாலாஜியை வெற்றி பெற செய்யுங்கள் என்றார்.

அவைத் தலைவர் பாலசுப்பிரமணியன், பகுதி செயலாளர்கள் அன்புமணி, காவேரி, கவுன்சிலர் லட்சிகாஸ்ரீ, பொதுக் குழு உறுப்பினர் முருகானந்தம், வட்ட செயலாளர்கள் நல்லதம்பி, ஆறுமுகம், நாகராஜ் பங்கேற்றனர்.

Advertisement