'தேர்தலுக்கு பின் மக்கள் மன்றத்தில் இருந்து விஜய் வெளியேறி விடுவார்'

2

சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் நம் நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி:

மதுரை மாநகராட்சியில் நடந்த ஊழலால், தி.மு.க., மேயர், ஐந்து மண்டல குழுத் தலைவர்கள் ராஜினாமா செய்தனர். ஆனாலும், இந்த ஊழலை எதிர்த்து, அ.தி.மு.க., பெரிய அளவில் போராட்டம் நடத்திவில்லை. ஏன்?




ஆளுங்கட்சியில் ஊழலை ஊர்ஜிதம் பண்ணும் விதமாக தான் ராஜினாமா செய்ய வைத்துள்ளனர். அதை கொண்டு வந்ததில், அ.தி.மு.க.,வின் பங்கை யாரும் மறைக்கவோ, மறுக்கவோ முடியாது. ஆளுங்கட்சியை தாண்டி, இவ்வளவு துாரம் வெளியே கொண்டு வந்து, ஆளுங்கட்சியையே நடவடிக்கை எடுக்க வைத்துள்ளோம். தி.மு.க., அரசு தானாக விசாரித்து நடவடிக்கை எடுக்கவில்லை.

அழுத்தம் கொடுத்ததன் காரணமாக, அதில் உண்மை இருக்கும் காரணத்தால்தான் தி.மு.க., மேயர் ராஜினாமா செய்தார். மதுரை மாநகராட்சி வரலாற்றிலேயே இப்படி நடந்தது இல்லை. இவ்விஷயத்தை அவர்களால் கடந்து போக முடியாததால் தான் நடவடிக்கை எடுத்தனர்; இல்லையெனில் காப்பாற்றத்தானே பார்த்திருப்பர்? மக்களிடம் கொண்டு போனதில் முதன்மையான பங்கு அ.தி.மு.க.,வுக்கு தான்.

கடந்த 2019 லோக்சபா தேர்தலுக்கு முன், அடிக்கல் நாட்டப்பட்ட, எய்ம்ஸ் பணிகள் இன்னும் முடியவில்லை. 'டபுள் இன்ஜின்' ஆட்சி வரும் வரை காத்திருக்க திட்டமா?




எய்ம்ஸ் வரப்பிரசாதமான திட்டம். தமிழகத்திற்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக ஜெயலலிதா முன்மொழிந்து, பழனிசாமி தலைமையில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதை, நாங்கள் சிறப்பு பிரிவின் கீழ் வாங்கினோம். 'ஜெய்க்கா' நிறுவனத்திடம் கடனுதவி பெற்று, இதை கொண்டு வந்தோம்.

கடன் பெறுவதற்கான நடைமுறைகள் நடந்த போது கொரோனா ஏற்பட்டது. இதனால், ஒப்பந்தம் அப்படியே கிடப்பில் இருந்தது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், தி.மு.க., எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நாங்கள் நிலத்தை 'ஹேண்ட் ஓவர்' பண்ணிட்டோம். ஜெய்க்கா 'டேக் ஓவர்' பண்ணவில்லை. இதற்கிடையே நாங்கள், மாநில நிதியின்கீழ் எய்ம்ஸிற்காக நான்குவழிச் சாலை மற்றும் சுற்றுச்சுவரை அமைத்தோம். ஒரு சென்ட் கூட தனியார் இடம் கிடையாது. அந்த இடம் மருத்துவ துறைக்கான இடம் என்பதால் நடைமுறைகள் எளிதாக இருந்தன.

இது, வேறு இடத்திற்கு செல்ல வேண்டியது. மதுரை உட்பட தென்மாவட்டங்களுக்கும், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்ற அடிப்படையில் கொண்டு வந்தோம். 10 நிமிடத்தில், விமான நிலையத்தில் இருந்து எய்ம்ஸ் செல்ல தனி ரோடே அமைத்தோம். தி.மு.க., ஆட்சி அமைந்ததும் கிடப்பில் போட்டுவிட்டனர். இப்போது, முடியும் தறுவாய்க்கு வந்துவிட்டது. முதல்வராக பழனிசாமி பதவி ஏற்றதும் பிரதமர் மோடி திறந்து வைப்பார்.

அமைச்சர் தியாகராஜன் போட்டியிடும் மதுரை தொகுதியை, புதிய நீதிக்கட்சிக்கு ஒதுக்கியதற்கு உள்ளூர் அ.தி.மு.க., நிர்வாகிகள் போராட்டம் நடத்தினர். அமைச்சருக்கு சாதகமாக அ.தி.மு.க., தலைமை செயல்படுகிறதா?




கூட்டணி கட்சியினர் தாங்கள் விரும்பிய தொகுதிகளில் போட்டியிட விரும்புவர். நாம் மட்டும் போட்டியிடுவதற்காக அவர்கள் கூட்டணி சேருவதில்லை. தங்கள் கட்சி வளர்ச்சிக்காக தான் கூட்டணி சேருகின்றனர். எம்.எல்.ஏ., எண்ணிக்கை அடிப்படையில் தான் ஒரு கட்சியின் மதிப்பீடு உள்ளது. அவர்களுக்கும் தொகுதியை ஒதுக்கீடு செய்து தானே ஆக வேண்டும்.

அ.தி.மு.க.,வில் எதிர்பார்த்தவர்களுக்கு சில வருத்தங்கள் இருக்கலாம். ஆனால், அதை மனதில் கொள்ளாமல் தொண்டர்கள் கட்சியை விட்டுத் தரமாட்டார்கள்.

தியாகராஜன் மட்டுமின்றி வேலு, நேரு உள்ளிட்ட 15 அமைச்சர்களுக்கும் எதிராக, அ.தி.மு.க., நேரடியாக வேட்பாளர்களை நிறுத்தவில்லை. அமைச்சர்களை எதிர்க்க அ.தி.மு.க., தயங்குகிறதா?




கூட்டணி கட்சியினர் கேட்கும் தொகுதிகளைதானே நாங்கள் கொடுக்க முடியும். அவர்கள் எங்கே வலிமையாக உள்ளனர், எந்த தொகுதி வேண்டும் என்ற அடிப்படையிலேயே தொகுதி பங்கீடு செய்ய முடியும். கூட்டணி கட்சியினர், சேவை செய்வதற்காக மட்டும் வரமாட்டார்கள்.

எம்.ஜி.ஆர்., காலத்தில் இருந்து, அ.தி.மு.க., கோட்டையாக இருந்த மதுரையில், கடந்த 2024 லோக்சபா தேர்தலில், மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது ஏன்?




அந்த தேர்தலில் எங்களுக்கு பிரதமர் வேட்பாளர் இல்லை. தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைக்கவில்லை. பொதுச்செயலர் பழனிசாமி ஒரு நிலைப்பாட்டில் இருந்தார். மாநில உரிமைகளை எந்த தேசிய கட்சியும் மதிப்பதில்லை; அதனால், மாநில உரிமைகளை காப்பாற்ற மாநில கட்சிகள் அதிகாரத்திற்கு வரவேண்டும் என்ற கோஷத்தை நாங்கள் முன்வைத்தோம்.

ஆனால், 'உங்கள் பிரதமர் வேட்பாளர் யார் அல்லது யாருக்கு ஆதரவு தரப்போகிறீர்கள்' என்று கேட்டுதான் மக்கள் ஓட்டு போட்டனர். இந்த இரண்டையும் நாங்கள் முன்னிலைப்படுத்தவில்லை. ஜெ., இருக்கும்போது அவர்தான் பிரதமர் வேட்பாளர் என்று கூறினோம். 39 தொகுதிகளில் 37 கொடுத்தனர். அதேபோல் பழனிசாமியை பிரதமர் வேட்பாளர் என்று நாங்கள் சொல்லி இருந்தால், மக்கள் முழு வெற்றியை கொடுத்திருப்பர்.

கடந்த முறை, ஒன்பது தென் மாவட்டங்களில் உள்ள 51 தொகுதிகளில், 15ல் மட்டுமே அ.தி.மு.க., வென்றது. காரணம் என்ன?




ஒற்றைத் தலைமை வந்தபின், லோக்சபா தேர்தலையடுத்து இத்தேர்தலை சந்திக்கிறோம். இந்த வியூகம் எங்களுக்கு நல்ல பலன் தரும். தென் மாவட்டத்தின் 58 தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம்.

பன்னீர்செல்வம் தி.மு.க.,வில் சேர்ந்ததும், சசிகலா தனியாக வேட்பாளர்களை நிறுத்தியிருப்பதும், தென் மாவட்டங்களில் அ.தி.மு.க.,வுக்கு எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும்?




இரட்டை இலை, கட்சி இந்த இரண்டையும் யார் துாக்கி பிடிக்கின்றனரோ அவர்களை மக்கள் துாக்கிப்பிடிப்பர். யார் துாக்கி எறிகின்றனரோ அவர்களை மக்கள் துாக்கி எறிவர். இது கடந்த கால வரலாறு. இதற்கு, தனிக் கட்சியை தொடங்கிய எஸ்.டி.எஸ்., திருநாவுக்கரசு, கண்ணப்பன், கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்டோரை உதாரணமாக கூறலாம்.

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், தி.மு.க.,வில் சேர்ந்த பின், தேனி மாவட்டத்தில் அ.தி.மு.க.,வே இல்லை என கூறுகிறாரே...




நான், தேர்தல் பணிக்காக தேனி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் சென்றேன். அப்போது மக்கள், 'இதுவரை எங்களுக்கு இரட்டை இலைதான் தெரியும். அவர் (பன்னீர்செல்வம்) இரட்டை இலையோடு வந்தார். நாங்கள் வெற்றிப்பெறச் செய்தோம். இன்று இரட்டை இலையை அவர் காலில் மிதித்ததோடு மட்டுமின்றி தோற்கடிப்பேன் என்கிறார். நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல' என்று சொல்கின்றனர். போடி, இரட்டை இலை தொகுதி. அதனால்தான் அவர் ஜெயித்தார்.

இப்போது உதயசூரியனுக்கு போயிருக்கிறார். இனி, மக்கள் கொடுக்கும் தீர்ப்பை பார்த்துவிட்டு இரட்டை இலையை ஏன் காலில் போட்டு மிதித்தோம் என வருத்தப்படுவார். அதற்கான காலமும் நேரமும் ரொம்ப துாரம் இல்லை. மே 4ல் தெரிந்துவிடும்.

பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோது, சசிகலா முதல்வராக வேண்டும் என்றீர்கள். அடுத்து, கட்சி தலைமைக்கு ஒற்றை தலைவர் வேண்டும் என்றீர்கள். அவருக்கு எதிராக ஒவ்வொரு முறையும் காய் நகர்த்தியதுடன், பன்னீர்செல்வம் மீண்டும் அ.தி.மு.க.,வில் இணைய முடியாததற்கு, நீங்கள் தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. உண்மையா?




பன்னீர்செல்வம் மூன்று முறை முதல்வராக இருந்தவர். அவர் எந்த உயரத்தில் இருந்தார் என்று தெரியும். நான் எந்த உயரத்தில் இருக்கிறேன் என்றும் தெரியும். நான் ஒரு வியூகம் அமைத்து செயல்படுத்துகிறேன் என்று சொன்னால், யார் அதை நம்புவர்? யார் முதல்வராக வரவேண்டும் என்பதில் கட்சியினர் முன்மொழிந்ததை நான் சொன்னேன்.

எனக்கு அதற்கான அதிகாரம் கொடுத்திருந்ததால் சொன்னேன். தலைமை சொன்னதை சொல்கிறேன்; சொல்வேன். தலைமை எங்களுக்கு ஆண்டவன் மாதிரி. அவர்கள் சொல்வதை, எந்த பின்விளைவுகளையும் பற்றி யோசிக்காமல் செயல்படுத்துவதே எங்கள் பணி.

த.வெ.க., எத்தனை சதவீத ஓட்டுகள் பெறும்? அது யாருக்கு பாதிப்பை ஏற்படுத்தும்?




மக்கள் மன்றத்தில் இருந்து இந்த தேர்தலுக்கு பின் விஜய் வெளியேறி விடுவார். மக்கள் கவனத்தில் இல்லாத வகையில் ஓட்டு சதவீதம் பெறுவார்.

ஜெயலலிதா வெற்றிக்கு, பெண்கள் ஓட்டுகள் முக்கிய காரணம். இப்போது பெண்கள் மத்தியில் த.வெ.க.,வுக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. அ.தி.மு.க.,விடம் இருந்து பெண்கள் ஓட்டுகள் நழுவுகின்றனவா?




த.வெ.க., இதுவரை ஒரு கவுன்சிலர் தேர்தல், சட்டசபை, லோக்சபா, இடைத்தேர்தலில் போட்டியிட்டு காண்பித்துள்ளதா? அவர்கள் கட்சி ஆரம்பித்த பின் இடைத்தேர்தல் வந்தது. அதில் நிரூபித்து காட்டியிருந்தால் நீங்கள் கேட்ட கேள்வி நியாயமானது. இது, 'சீன் கிரியேட்' பண்ணுகிற மாதிரி தெரியுது. சினிமாவில் காண்பிப்பது போல் மக்களிடம் காண்பிக்கின்றனர். சினிமாவில் வேண்டுமானால் அது வெற்றி பெறலாம்; நிஜத்தில் வெற்றி பெறாது.

தமிழக அரசு 10 லட்சம் கோடி ரூபாய் கடனில் இருக்கும்போது, இலவசங்களை இஷ்டத்திற்கு அறிவித்துள்ளீர்களே. இது சாத்தியமாகுமா?




ஒரு சிறந்த நிர்வாகம் என்பது தேவைக்கேற்ப நிதி ஆதாரங்களை உருவாக்க வேண்டும். மத்திய அரசிடம் சிறப்பு நிதி பெறலாம். மாநிலத்தில் எத்தனையோ நிதி ஆதாரங்கள் இருக்கின்றன. கனிமவளங்கள் இருக்கின்றன. வரியினங்கள் இருக்கின்றன.


எளிய முறையில் எல்லாரையும் பங்களிக்க செய்வதன் வாயிலாக வரிச்சுமையை குறைக்கலாம். அரசு எதுவுமே தரக்கூடாது, தராது என்றால் மக்கள் ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

திருமங்கலத்தில் உங்களை எதிர்த்து, ஜீவிதா நாச்சியாரை சசிகலா நிறுத்தியிருக்கிறார். அவரால் எவ்வளவு ஓட்டு பிரியும்?



திருமங்கலம் தொகுதியில் இரண்டரை லட் சம் வாக்காளர்கள் உள்ளனர். 350 ஓட்டுச்சாவடிகள், 114 ஊராட்சிகள், 415 கிராமங்கள் உள்ளன. நான் போகாத கிராமங்கள் கிடையாது. எனக்கு ஓட்டு போட்டவர்கள் மட்டுமின்றி எனக்கு ஓட்டு போடாதவர்களையும் சந்திக்கிறேன். இரண்டரை லட்சம் பேருக்கு என்னை தெரியும் என்றாலும், ஒன்றரை லட்சம் பேர்தான் ஓட்டு போடுவர். அந்த ஒன்றரை லட்சம் பேரிடமிருந்து நான் விலகி நின்றது இல்லை.

நான் நான்காவது முறையாக போட்டியிடுகிறேன். ஒரு தொண்டனுக்கு தலைமை நான்கு முறை வாய்ப்பு தருகிறது என்றால், அது, தலைமை என் மீது வைத்துள்ள நம்பிக்கை. அந்த நம்பிக்கைக்கு நான் எள் முனையளவும் தடம் புரண்டதில்லை. அதுபோல் மக்கள் எந்த நம்பிக்கையில் எனக்கு ஓட்டு போட்டனரோ, அந்த நம்பிக்கையில் இருந்தும் நான் தடம் புரண்டதில்லை. அதனால் தொடர்ந்து என்னை வெற்றி பெறச் செய்வர்.

பிரசாரத்தின்போது, எதிர்பார்க்காத பரிசு தருவேன் எனக் கூறி வருகிறீர்கள். அப்படி என்ன பரிசுப்பொருள் தரப் போகிறீர்கள்?




எப்பவுமே மக்களை வெறுங்கையுடன் போய் பார்க்க மாட்டேன். என்னால் முடிந்த உதவிகளை செய்துவிட்டு வருவேன். தேர்தல் நன்னடத்தை விதிகளால் இப்போது மக்களிடம் ஆசி மட்டுமே என்னால் பெற முடியும். 'நான் வெறும் கையுடன் வரமாட்டேன். பரிசுப்பொருளுடன் வருவேன்' என சொன்னேன்.

மே 4ம் தேதியுடன் நன்னடத்தை விதிகள் முடிந்துவிடும். மே 5ல் மக்களை சந்தித்து மகிழ்ச்சிப்படுத்த எந்த தடையும் இல்லை. இவ்வாறு கூறினார்.

Advertisement