சுயே. வேட்பாளர்களுக்கு சின்னம் ;தர்பூசணி, இஞ்சி, வெண்டைக்காய்

கோவை: கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களுக்கு தர்பூசணி, இஞ்சி, வெண்டைக்காய், பச்சை மிளகாய் உள்ளிட்ட சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளில், 183 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அங்கீகரீக்கப்பட்ட அரசியல் கட்சியினர் மட்டுமின்றி, பதிவு பெற்ற கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களும் இம்முறை அதிகமாக போட்டியிடுகின்றனர். 5 தொகுதிகளில் கூடுதலான வேட்பாளர்கள் போட்டியிடுவதால், 2 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

கோவை தெற்கு தொகுதியில் 31 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில், 3 பேர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள், 4 பேர் பதிவு பெற்ற கட்சியினர். 24 பேர் சுயேட்சை வேட்பாளர்கள். சுயேட்சைகளுக்கு ஒதுக்குவதற்காக, 184 சின்னங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதில், ஒவ்வொருவரும் 3 சின்னங்கள் பரிந்துரைக்க வேண்டும். அதில், ஒரு சின்னம் ஒதுக்கப்படும். ஒரே சின்னத்தை பலரும் கேட்டிருந்தால் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும்.

புதிய தலைமுறை மக்கள் கட்சி வேட்பாளர் தண்டபாணி, தமிழக முற்போக்கு மக்கள் கட்சி மகேஸ்வரன் ஆகிய இருவரும், காஸ் சிலிண்டர் சின்னம் கோரினர். அதனால், குலுக்கல் போடப்பட்டது. மகேஸ்வரனுக்கு காஸ் சிலிண்டர் ஒதுக்கப்பட்டது. வேறு சின்னம் தேர்ந்தெடுக்க தண்டபாணிக்கு அறிவுறுத்தப்பட்டது. அவர், டார்ச் லைட் தேர்வு செய்தார். பதிவு பெற்ற கட்சியான மக்கள் நீதி மய்யத்துக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்படும். அக்கட்சி வேட்பாளர், தெற்கு தொகுதியில் இத்தேர்தலில் போட்டியிடாததால், தண்டபாணிக்கு அச்சின்னம் ஒதுக்கப்பட்டது.

மற்ற சுயேட்சை வேட்பாளர்களுக்கு, அவர்கள் கோரிய சின்னங்கள் ஒதுக்கப்பட்டன. சற்று வித்தியாசமாக தர்பூசணி, இஞ்சி, வெண்டைக்காய், பச்சை மிளகாய், தீப்பெட்டி உள்ளிட்ட சின்னங்களை பெற்றிருக்கின்றனர். இச்சின்னங்கள் வாக்காளர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றன. தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து சின்னங்களுடன் கூடிய பேலட் ஷீட் அச்சிடும் பணி நடந்து வருகிறது. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பொருத்தும் பணி விரைவில் துவங்கும்.

Advertisement