ஊசலாடும் கைப்பிடி இரும்பு கம்பி; நல்வாழ்வு மையத்திற்கு வருவோர் அவதி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் திருக்காலிமேடு எம்.ஜி.ஆர்., நகரில் உள்ள நகர்ப்புற நல்வாழ்வு மையத்திற்கு வருவோர், சாய்தளத்தில் கைப்பிடி இரும்பு கம்பியால் அவதிப்படுகின்றனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சி 22வது வார்டு திருக்காலிமேடு எம்.ஜி.ஆர்., நகரில், 25 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட நகர்ப்புற நல்வாழ்வு மையம் 2023ம் ஆண்டு ஜூன் மாதம் 6ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலினால், வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்து வைக்கப்பட்டது.

இங்கு தினமும் நுாற்றுக்கணக்கானோர் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு பரிசோதனை, சளி, இருமல், காய்ச்சல் என, பல்வேறு நோய்களுக்கும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

நலவாழ்வு மையத்தில் அமைக்கப்பட்டுள்ள சாய்தளத்தின் கைப்பிடி இரும்பு கம்பி நிலத்தடியில் பிடிப்பு இல்லாமல் ஊசலாடும் நிலையில் உள்ளது.

இதனால், சாய்தளம் வழியாக நடந்து செல்லும் செல்லும் முதியோர், நடக்க முடியாமல் சிரமப்படும் நோயாளிகள் சாய்தள கைப்பிடி இரும்பு கம்பியை பிடிக்கும்போது, அது போதுமான பிடிப்பு இல்லாமல் தள்ளாடுவதால், நிலை தடுமாறி விழுகின்றனர். மேலும், ஊசலாடும் நிலையில் உள்ள இரும்பு கம்பி மாயமாகும் நிலை உள்ளது.

எனவே, திருக்காலிமேடு எம்.ஜி.ஆர்., நகர்ப்புற நல்வாழ்வு மையத்தின் சாய்தளத்தின் ஊசலாடும் நிலையில் கைப்பிடி இரும்பு கம்பியை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இம்மையத்திற்கு வரும் நோயாளிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement