தனியார் நிறுவன கழிவுநீரால் முசரவாக்கத்தில் சுகாதார சீர்கேடு

முசரவாக்கம்:முசரவாக்கம் கிராமத்தில், தனியார் நிறுவன கழிவுநீர் சாலையில் விடப்படுவதால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் ஒன்றியம், முசரவாக்கம் கிராமத்தில் தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீரை முறையாக வெளியேற்றாமல் முத்துவேடு கிராமத்திற்கு செல்லும் சாலையில் விடுகின்றனர்.

இதனால், இச்சாலையில் நடந்து செல்வோர் கழிவுநீரில் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. ஒரு வாரத்திற்கும் மேலாக வெளியேறும் கழிவுநீரால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

எனவே, தனியார் நிறுவனம் சாலையில் கழிவுநீர் விடுவதை தடை செய்ய முசரவாக்கம் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement