துணை தேர்தல் கமிஷனர் ஆய்வு

கோவை: மத்திய தேர்தல் ஆணைய துணை கமிஷனர் பானு பிரகாஷ், கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் செய்யப்பட்டுள்ள சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஏப்ரல்13ம் தேதி ஆய்வு செய்கிறார்.

தமிழக சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவுக்கான பணிகள் நடந்து வருகின்றன. ஓட்டுச்சாவடிக்கு தேவையான பொருட்கள், அந்தந்த தொகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. பதிவாகும் ஓட்டு சதவீதத்தை அதிகரிக்கச் செய்யும் வகையில் வாக்காளர்களிடம் பல்வேறு வழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. ஓட்டுப்பதிவுக்கு மாவட்ட நிர்வாகம் தயாராக இருக்கிறதா என மத்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் 13ம் தேதி நடக்கிறது. மத்திய தேர்தல் ஆணைய துணை கமிஷனர் பானு பிரகாஷ் பங்கேற்கிறார். ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகள், ஓட்டுச்சாவடிகள் தயாராக இருக்கின்றனவா, அப்சர்வர்கள் என்ன செய்கின்றனர், பறக்கும் படையினர் செயல்பாடு, வாக்காளர் பட்டியல், வாக்காளர் தகவல் சீட்டு வினியோகம், மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கு மேற்பட்டோர் வீட்டுக்குச் சென்று தபால் ஓட்டுப்பதிவு செய்வது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்படும்.

பதற்றமான ஓட்டுச்சாவடிகளை கண்காணிக்க செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து விவாதிக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறித்து அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளான கலெக்டர்கள் விளக்குவர் என தேர்தல் பிரிவினர் தெரிவித்தனர்.

Advertisement