'டபுள் டெக்கர் ஏசி' பஸ் கட்டணம் மாற்றி அமைத்தது சுற்றுலா துறை

சென்னை: சென்னை மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ள 'டபுள் டெக்கர் ஏசி' பஸ் கட்டணத்தை, 200 ரூபாய், 150 ரூபாய், 100 ரூபாய் என, மூன்று பிரிவுகளாக சுற்றுலா துறை மாற்றியுள்ளது.

தமிழக சுற்றுலா துறையை மேம்படுத்தும் நோக்கில், 1.89 கோடி ரூபாய் செலவில் வாங்கப்பட்ட 'டபுள் டெக்கர்' எனும் இரண்டு அடுக்கு சுற்றுலா 'ஏசி' பேருந்து சேவையை, முதல்வர் ஸ்டாலின் கடந்த ஜனவரி 12ல் துவக்கி வைத்தார்.

அதிகாரப்பூர்வமாக இப்பேருந்து கடந்த 24ம் தேதி முதல் சென்னையில் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி, சென்னை வாலாஜா சாலையில் தொடங்கும் இதன் பயணம், எல்.ஐ.சி., ஸ்பென்சர் பிளாசா, பாடிகார்டு முனீஸ்வரர் கோவில், தலைமை செயலகம், மெரினா, வானொலி நிலையம் உள்ளிட்ட சென்னையின் முக்கிய சுற்றுலா வழித்தடங்களில் இயக்கப்படுகிறது.

இதற்கு, பெரியவர்களுக்கு 200 ரூபாய்; சிறியவர்களுக்கு 150 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

இந்நிலையில், பயணியர் வசதியை கருத்தில் கொண்டு, மேல் டெக்கர், கீழ் டெக்கர், சிறார்களுக்கான கட்டணத்தை சுற்றுலா துறை மாற்றியுள்ளது.

அதன்படி, மேல் டெக்கர் இருக்கைக்கு 200 ரூபாய், கீழ் டெக்கர் இருக்கைக்கு 150 ரூபாய், சிறார்களுக்கு 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

Advertisement