மக்களை ஏமாற்ற ஆசையை துாண்டி போலி 'டோக்கன்' வழங்கும் தி.மு.க., பா.ம.க., வேட்பாளர் திலகபாமா குற்றச்சாட்டு

பெரம்பூர்: ''தேர்தல் நெருங்கும் வேளையில் போலி டோக்கன் கொடுத்து தி.மு.க.,வினர், மக்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபடுகின்றனர்,'' என, பா.ம.க., வேட்பாளர் திலகபாமா குற்றஞ்சாட்டினார்.

பெரம்பூர் சட்டசபை தொகுதியில் 'சிட்டிங்' எம்.எல்.ஏ., ஆர்.டி.சேகர், த.வெ.க., தலைவர் விஜய், பா.ம.க., சார்பில் கட்சி பொருளாளர் திலகபாமா களமிறக்கப்பட்டுள்ளனர். இதனால், 'ஸ்டார்' அந்தஸ்து பெற்றுள்ள பெரம்பூர் தொகுதி மீது, நாடு முழுதும் கவனம் பெற்றுள்ளது.

பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வரும் திலகபாமாவிற்கு, பகுதி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று தன் பிரசாரத்தை துவங்கியவர், கொடுங்கையூரில், 'சம்மர் பாக்சிங்' முகாமை துவக்கி வைத்தார்.

மாணவர்களின் பயிற்சிகளை பார்வையிட்டு உற்சாகப்படுத்தினார். அதைத்தொடர்ந்து, மரம் நடும் நிகழ்ச்சியிலும் பங்கேற்று, சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தினார்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

தி.மு.க., தோல்வி பயத்தில், பரிசு 'டோக்கன்' வினியோகம், பண பட்டுவாடா உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபடுகிறது. இது தொடர்பாக தேர்தல் கமிஷன் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த நிலையில், வீடு வீடாக 8,000 ரூபாய் போலி கூப்பன் வழங்க துவங்கி உள்ளனர். ஒருவரை ஏமாற்ற வேண்டும் என்றால் ஆசையை துாண்ட வேண்டும்; அந்த வேலையை இன்று தி.மு.க., கையில் எடுத்திருக்கிறது.

தி.மு.க., - எம்.பி., ஒருவர் பெரம்பூர் தொகுதியில் 8,000 ரூபாய் டோக்கன்களை கையில் வைத்து, 'போஸ்' கொடுத்துக் கொண்டிருக்கும் புகைப்படங்கள், சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதை, தேர்தல் கமிஷன் கண்டித்து, கட்டுப்பாடு விதித்துள்ளது வரவேற்கத்தக்கது.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement