தார்வாட் மாவட்ட இளைஞர் காங்., பொதுச்செயலர் வெட்டிக்கொலை

தார்வாட் :: தார்வாட் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலரை மர்மகும்பல் வெட்டிக் கொன்றது.

தார்வாட் மாவட்டம் ஹாஷ்மி நகரை சேர்ந்தவர் பைரோஜ் படான், 28. இவர், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலராக இருந்தார். வரும், 24ம் தேதி, இவருக்கு திருமணம் நடக்கவிருந்தது. அதற்கான ஏற்பாடுகளை, குடும்பத்தினர் செய்து வந்தனர்.

இந்நிலையில், பைரோஜ் படான் நேற்று முன்தினம் இரவு, வீட்டிற்கு வெளியே நின்றிருந்தார். அப்போது, அங்குவந்த மர்ம கும்பல், அவரை அரிவாள், இரும்புத்தடி போன்ற ஆயுதங்களால் கண் மூடித்தனமாக தாக்கியது. பைரோஜ் படான் அவர்களிடம் இருந்து தப்பி, அறைக்குள் சென்று கதவை தாழிட்டு கொண்டார். அப்போதும் விடாமல், கதவை உடைத்து, அவரை தாக்கியதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவரை காப்பாற்ற வந்த குடும்பத்தினரையும் தாக்கிவிட்டு மர்மகும்பல் தப்பியோடியது. பைரோஜ் படானை தாக்கி கொலை செய்தது, அவரது நண்பர்களே என, அவரது தாயார் கூறியுள்ளார். என்ன காரணத்துக்காக கொலை நடந்தது என்று தெரியவில்லை. அரசியல் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தார்வாட் நகர் போலீசார், அங்கு வந்து பார்வையிட்டனர். ஹூப்பள்ளி - தார்வாட் நகர போலீஸ் கமிஷனர் சசிகுமார், நேற்று காலை சம்பவ இடத்தை பார்வையிட்டார்.

அவர் அளித்த பேட்டி:

பைரோஜ் படான் கொலை சம்பவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. நேற்று முன் தினம் இரவு, 10:00 மணியளவில், இந்த சம்பவம் நடந்துள்ளது.

சம்பவத்தை கண்ட சாட்சிகள், குடும்பத்தினர் கூறிய தகவல்களின்படி, கொலையாளிகளின் அடையாளம் தெரிந்துள்ளது. விரைவில், அவர்களை கைது செய்வோம்.

அறிமுகமுள்ளவர்களே பைரோஜ் படானை கொன்றதாக, அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர். அனைத்து கோணங்களிலும், விசாரணை நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement