தரைமட்ட பாலத்தை உயர்த்த வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை

1

வால்பாறை: வால்பாறை, ரொட்டிக்கடை பகுதியில் தரைமட்ட பாலத்தை உயர்த்த வேண்டும், என, வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வால்பாறைக்கு அதிகளவில் சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். மலைப்பாதையில் விபத்து ஏற்படாமல் தவிர்க்க, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர்.

இந்நிலையில், வால்பாறையிலிருந்து பொள்ளாச்சி செல்லும் வழித்தடத்தில், ரொட்டிக்கடை பகுதியில் உள்ள தரைமட்ட பாலம் மிகவும் தாழ்வாக உள்ளது. இதனால், இந்த ரோட்டில் அதிவேகமாக வரும் வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

வாகன ஓட்டுநர்கள் கூறியதாவது:

வால்பாறையில் பல்வேறு இடங்களில் ரோடு விரிவுபடுத்தாமல் உள்ளது. குறிப்பாக, நடுமலை செல்லும் ரோடு, ஸ்டேன்மோர் சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் ரோட்டை விரிவுபடுத்த வேண்டும்.

அதே போல், ரொட்டிக்கடை பகுதியில் தாழ்வான பாலத்தில், மழை காலங்களில் தண்ணீர் தேங்கி வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுவதால், இந்த பகுதியில் உள்ள பாலத்தை உயர்த்தி கட்ட வேண்டும். ஸ்டேன்மோர் ரோடு, சிறுகுன்றா ரோடு பகுதியில் உள்ள தரைமட்ட பாலத்தையும் உயர்த்தி கட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கூறினர்.

Advertisement