100 மார்க் வேணுமா; பூஜ்யம் வேணுமா! வேட்பாளர் சபரி கார்த்திகேயன் கேள்வி

போத்தனுார்: ''குறிச்சி பகுதியில் பட்டா பிரச்னைக்கு தீர்வு காண, அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன்,'' என, கிணத்துக்கடவு தொகுதி தி.மு.க. வேட்பாளர் சபரி சார்த்திகேயன் உறுதியளித்தார்.

கிணத்துக்கடவு தொகுதி தி.மு.க.வேட்பாளர் சபரி கார்த்திகேயன் சுந்தராபுரம், மதுக்கரை மார்க்கெட் மெயின் ரோடு, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.

சபரிகார்த்திகேயன் பேசியதாவது:

கொரோனா காலத்தில் மக்களுக்கு ரூ.1,000 பழனிசாமி வழங்கினார். எதிர்கட்சி தலைவராக இருந்த முதல்வர் ஸ்டாலின் அதை ரூ.4,000 உயர்த்த கோரினார். மறுப்பு தெரிவித்தார் பழனிசாமி. 2021ல் முதல்வர் ஸ்டாலின் முதலில் கொடுத்ததே, ரூ.4,000 தான். மகளிருக்கு உரிமைதொகை, விடியல் பயணம், காலை உணவு திட்டம் என அனைத்து திட்டங்களையும் கொடுத்து, 100 மதிப்பெண் எடுத்தவர் முதல்வர். பழனிசாமியோ பூஜ்யம் வாங்கியவர்.

உங்களுக்கு 100 மதிப்பெண் பெற்ற முதல்வர் வேண்டுமா, பூஜ்யம் எடுத்தவர் வேண்டுமா. முதல்வர் ஸ்டாலின் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 வழங்கப்படும். ரூ.8,000க்கு கூப்பன் தரப்படும். பிரிட்ஜ், வாஷிங் மெஷின் என எது வேண்டுமானாலும் நீங்கள் வாங்கலாம். 10 ஆண்டுகளாக இங்கு எம்.எல்.ஏ. வாக இருந்தவர்கள் எதுவும் செய்யவில்லை.

இத்தொகுதி எம்.எல்.ஏ.,வை பார்த்ததாகவே யாரும் கூறவில்லை. ஒவ்வொரு பகுதியிலும் உள்ள அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு காண முக்கியத்துவம் கொடுப்பேன். குறிச்சி பகுதியில் பலர் பட்டா பிரச்னை குறித்து கூறினர். சட்டத்திற்குட்பட்டு இப்பிரச்னைக்கு தீர்வு கண்டேன். என்னை வெற்றி பெற செய்தால், உங்கள் வீட்டு பிள்ளயாக ஓடோடி வந்து உழைப்பேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement