கைவிட்ட எம்.எல்.ஏ., அமைச்சர்; கருப்பு கொடி ஏற்றிய நெசவாளர்கள்

10


நமது நிருபர்




தி .மு.க., எம்.எல்.ஏ.,வின் பிரசாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கைத்தறி நெசவாளர்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றினர். மேலும், எம்.எல்.ஏ., வருகையின் போதும் கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.


ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு சட்டசபை தொகுதி, வாழைப்பந்தல் பஞ்சாயத்துக்குட்பட்ட பச்சையம்மன் நகர் பகுதியில், ஆற்காடு தி.மு.க., வேட்பாளர் ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., நேற்று முன்தினம் ஓட்டு சேகரிக்க செல்ல இருந்தார். அதையறிந்த, பச்சையம்மன் நகரில் வசிக்கும் கைத்தறி மற்றும் நெசவு தொழிலாளர்கள், வீடுகளில் கருப்புக் கொடிகளை கட்டி வைத்தனர்.

தகவலறிந்த போலீசார் அங்கு சென்று, கருப்புக் கொடிகளை அகற்றினர். அப்போது கிராமத்தினருக்கும், போலீசார் மற்றும் தி.மு.க.,வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பானது. மேலும், பிரசாரத்திற்கு சென்ற தி.மு.க., - எம்.எல்.ஏ., ஈஸ்வரப்பனை நோக்கி கருப்புக் கொடிகளை காட்டி நெசவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.



இது குறித்து, கைத்தறி நெசவாளர் சரவணன் கூறியதாவது: வாழைப்பந்தல் பகுதியில், பட்டு கைத்தறி நெசவு தொழிலை நம்பி 200 குடும்பங்கள் உள்ளோம். கடந்த பருவமழை காலத்தின் போது, மூன்று மாதங்களாக கைத்தறி இயந்திரங்களில் மழைநீர் தேங்கியது.


தொழில் முடங்கி, ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டோம். நிவாரணம், உதவிகளை எம்.எல்.ஏ., வழங்கவில்லை. எங்கள் மாவட்டத்தில் தான், கைத்தறி துறை அமைச்சர் காந்தி இருக்கிறார். ஆனால், அவரும் எங்கள் மேம்பாட்டிற்கு எதுவும் செய்யவில்லை. அதனால் தான் எதிர்ப்பு தெரிவித்தோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement