பஸ் ஸ்டாண்டில் வெளிச்சம் இல்லாத ஹைமாஸ் விளக்கு

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் நுாறுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மையப்பகுதியாக இருப்பதாலும் சென்னை, மதுரை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு பஸ் வசதி உள்ளதாலும், பஸ் ஸ்டாண்டிற்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர்.

முக்கியத்துவம் வாய்ந்த பஸ் ஸ்டாண்ட்டிற்கு வரும் பயணிகள் பயனடையும் வகையில், பஸ் ஸ்டாண்டில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் உள்ள உயர் மின் கோபுரத்தில் இரண்டு விளக்குகள் மட்டுமே குறைந்த வெளிச்சத்தில் ஒளிர்கின்றன.

கோபுரத்தில் உள்ள மற்ற விளக்குகள் பழுதடைந்துள்ளதால் பஸ் ஸ்டாண்ட் பகுதி இருள் சூழ்ந்துள்ளது. இதனால், இரவில் பஸ் ஸ்டாண்ட் வரும் பெண்களும், முதியவர்களும் அச்சத்துடன் வந்து செல்லும் நிலை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பழுதடைந்த உயர் கோபுர மின் விளக்கை சீரமைக்க பயணிகள் வலியுறுத்தினர்.

Advertisement